ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்தனர். அக்டோபர் 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அவரை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

அப்போது ப.சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக இந்திராணி முகர்ஜியை ப.சிதம்பரம் ஒருபோதும் சந்தித்தது கிடையாது. அவர் நிதி அமைச்சராக இருந்தபோது ஒரு நாளைக்கு பல முக்கிய நபர்கள் வந்து சந்தித்து இருப்பார்கள். இதையெல்லாம் எப்படி அவர் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். குறிப்பாக இந்திராணி முகர்ஜி அவரை பார்த்தார் என்றால் அது தொடர்பாக அப்போதைய வருகை பதிவேட்டை  சோதனை செய்தால் தெரிந்துவிடும். குறிப்பாக தனது சொந்த மகளையே சுயநலத்திற்காக கொலை செய்த இந்திராணி முகர்ஜியின் அப்ரூவர் வாக்குமூலத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?’’ என வாதிட்டார்.   

இதையடுத்து சி.பி.ஐ சார்பில்  ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டார் துஷார் மேத்தா தனது வாதத்தில்,”இந்த வழக்கில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தால் பல லட்சம் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது. அவருக்கு  ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்கக்கூடும். மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது அவரது பணிக்காலத்தில் இருந்த வருகைப் பதிவேடு விவரங்கள் உட்பட பல தகவல்கள்  அழிக்கப்பட்டுள்ளது. மேலும் ப.சிதம்பரத்தை ஜாமீனில் விட்டால் வெளிநாடு தப்பி விடுவார் என கூறுவதில் உள்நோக்கம் ஏதும் இல்லை,’’ என்றார்.  இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ் கெய்த் தீர்ப்பை ஒத்திவைத்தார். 

இந்நிலையில், ப.சிதம்பரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பில் ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்கக்கூடும் சிபிஐ வாதத்தை ஏற்று ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.