ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஐ.என்.எக்ஸ், மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்திய பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி, டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த முறைகேடு வழக்கில், ப.சிதம்பரம் தரப்பில், ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேசமயம் சிபிஐ கைது நடவடிக்கை மற்றும் நீதிமன்ற காவலை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்தார். 

இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடுகையில், தனது பதவியை சிதம்பரம் தவறாக பயன்படுத்தியதற்கு வலுவான ஆதாரம் உள்ளது. அவர் மோசடியில் ஈடுபட்டார் என்பதால், தான், உச்சநீதிமன்றம் ஜாமீனை தள்ளுபடி செய்தது என  எனக்கூறினார்.
 

இதனை தொடர்ந்து குறுக்கிட்ட நீதிபதிகள் முன்ஜாமின் நிராகரிக்கப்பட்ட நாளில், உச்சநீதிமன்றத்தை நாடிய ப.சிதம்பரம் தரப்பு ஏன் உயர்நீதிமன்றத்தை நாடவில்லை என கேள்வி எழுப்பினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தொடர்பாக 7 நாட்களில் பதிலளிக்க சிபிஐக்கு உத்தரவிட்டனர். மேலும், ஜாமீன் தொடர்பாக கீழ் நீதிமன்றத்தை அணுக, டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி வழக்கை  23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதற்கிடையே, நீதிமன்ற காவலுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை ப.சிதம்பரம் வாபஸ் பெற்றுள்ளார்.