ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அக்டோபர் 3-ம் தேதி வரை திஹார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 21-ம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். வரும் 19-ம் தேதி வரை நிதீமன்ற காவலில் வைக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது.

இதனையடுத்து, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. நீதிமன்ற காவலை நீட்டிக்க வேண்டும் என்ற சிபிஐ கோரிக்கைக்கு ப.சிதம்பரம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், ப.சிதம்பரத்துக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் கபில் சிபில் கூறினார். அதற்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு சிறை அதிகாரிகளின் முடிவுக்கு உட்டப்பட்டது என்றார். 

இந்நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிபிஐ கோரிக்கை ஏற்று அக்டோபர் 3-ம் தேதி வரை காவலை நீட்டித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், மீண்டும் திஹாருக்கு ப.சிதம்பரம் செல்வதால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், வங்கி தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திட ப.சிதம்பரத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.