பஞ்சாப் நேஷனல் வங்கியி்ல் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர், நிரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து ரூ.13 ஆயிரம் கோடி வரை கடன் பெற்ற நிரவ் மோடி, அவரின் உறவினர் ெமகுல் சோக்சி ஆகியோர் கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர்.  இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது அமலாக்கப்பிரிவு, சிபிஐ தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நிரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. பூர்வி மோடி பெல்ஜியம் நாட்டு குடியுரிமை பெற்றவர். நிரவ் மோடியின் வழக்கை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், விசாரணைக்கு பூர்வி மோடி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமலாக்கப்பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர். விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனும் அனுப்பப்பட்டு இருந்தது. கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போது பூர்வி மோடியின் பெயரும்அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் இன்டர்போல் சார்பில் பூர்வி மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, இன்டர்போலில் உறுப்பினராக உள்ள 192 நாடுகளில் எந்த இடத்தில் இருந்தாலும் அவர் கைது செய்யப்படுவார் அல்லது இருப்பிடம் குறித்து சம்பந்தப்பட்ட அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதற்கிடையே பெல்ஜியத்தில் உள்ள நிரவ் மோடியின் சகோதரர் நீசல் மோடியையும் இந்தியா கொண்டுவரும் பணியையும் சிபிஐ தொடங்கியுள்ளது.