கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 23 ம் தேதி இரவு 8 மணி அளவில் மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமல் படுத்தப்படுவதாக அறிவித்தார். அதன்படி 24ம் தேதி நள்ளிரவில் இருந்து இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடைகள், வணிக வளாகங்கள், தொழில்நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு மக்கள் வீட்டில் இருக்க அரசு அறிவித்திருக்கிறது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து தனியார் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. சென்னை போன்ற வெளி நகரங்களில் பணியாற்றி கொண்டிருந்த மக்கள் அனைவரும் கடந்த ஒரு வாரமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்றனர். இந்தநிலையில் தகவல் தொழில்நுட்ப நிறுவங்கள் அனைத்தும் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தற்போது தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான பேர் வீட்டில் இருந்து பணியாற்றி கொண்டிருக்கின்றனர். இது தவிர பிற தொழில் ஊழியர்கள் அனைவர்க்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் வீடுகளில் பொழுது போக்க இணையத்தை தொடர்ச்சியாக பயன்படுத்துகின்றனர்.

இதன்காரணமாக இணைய பயன்பாட்டின் சேவை தற்போது தாறுமாறாக அதிகரித்திருக்கிறது. கடந்த சில நாட்களில் நாடெங்கும் டேட்டா பயன்பாடு 20 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. டேட்டா பயன்பாடு அதிகரிப்பால் செல்போன் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ரீதியிலான சுமை அதிகரித்து இணையதள வேகம் குறைந்துள்ளது. இப்படியே சென்றால் சில நாட்களில் இணைய பயன்பாட்டிற்கும் கட்டுப்பாடு வரக்கூடும் என தெரிகிறது. இதனால் மொபைல் போன் பயன்படுத்துவோர் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என செல்போன் நிறுவனங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.