தன் வாழ்வையே நாட்டுக்காக, கோடானு கோடி மக்களுக்காக அர்ப்பணித்து, தனக்கென்று ஒரு இல்லற வாழ்வை அமைத்துக்கொள்ளாத உத்தமத் தியாகியும்,  அரசியல் தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய்  உடல்நலக் குறைவால் நேற்று மாலை 5 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 93. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 11 ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

வாஜ்பாய் காலமானதையடுத்து, அவரது உடல் கிருஷ்ண மேனன் சாலையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு வாஜ்பாய் உடல் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உலகத்தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். இன்று மதியம் 1.30 மணிக்கு மேல் வாஜ்பாய்  இறுதி ஊர்வலம் தொடங்கியது.   இறுதி ஊர்வலம் ஸ்மிருதி ஸ்தலில் அடைந்த பிறகு அங்கு ராணுவ இசை, வேத மந்திரங்கள் முழங்க தரைப்படை, விமானப்படை, கடற்படை என முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினார். அவரது உடலை தகன மேடைக்கு கொண்டுவரப்பட்டு  தீ மூட்டப்பட்டது. 21 குண்டுகள் முழங்க வாஜ்பாய் உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

பாஜக உருவானது... 

பாரதிய ஜன சங்கத்தின் தலைவர்களும் தொண்டர்களும் இணைந்து, அடல் பிகாரி வாஜ்பாயைத் தலைவராகக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினர்.  காங்கிரஸ் அரசை வன்மையாகக் கண்டித்த பா.ஜ.க, பஞ்சாப்பில் நிலவிய சீக்கிய பயங்கரவாதத்திற்கு காங்கிரஸ் அரசின் ஊழலும் பாரபட்சமும் மிகுந்த ஆட்சியே காரணம் என்றது. 'இந்து - சீக்கிய ஒற்றுமைக்கு வித்திட்டவர் வாஜ்பாய்' என்று சீக்கியத் தலைவர் தாராசிங் கூறியுள்ளார்.

பா.ஜ.க புளூஸ்டார் நடவடிக்கையை எதிர்த்த முக்கியக் கட்சிகளுள் ஒன்றாகும். இந்திரா காந்தியை அவரது சீக்கிய மெய்க்காப்பாளர் சுட்டுக் கொன்றதால் டெல்லியில் 1984 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை பா.ஜ.க வெளிப்படையாகக் கண்டித்தது. பா.ஜ.க விடம் 1984 இல் இரண்டு நாடாளுமன்ற இடங்களே  இருந்த போதிலும் தனது கொள்கைகள் மூலமாக இளைஞர்களைக் கவர்ந்து, விரைவிலேயே இந்திய அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்தது. அப்போது வாஜ்பாய், கட்சியில் முக்கிய இடத்திலும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் திகழ்ந்தார்.  

டெல்லியில் 1993 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும், 1995 ஆம் ஆண்டு குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க வென்றது. டிசம்பர் 1994 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலிலும் கணிசமான இடங்களைக் கைப்பற்றியது. இதன் மூலம் தேசிய அரசியலில் பெறும் முக்கியத்துவம் பெற்றது. மும்பையில், நவம்பர் 1995 இல் நடைபெற்ற பா.ஜ.க பொதுக் கூட்டத்தில், மே 1996 இல் நடக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பா.ஜ.க வென்றால் வாஜ்பாய் பிரதமராவார் என்று அக்கட்சியின் தலைவர் அத்வானி அறிவித்தார். அத்தேர்தலில், பா.ஜ.க வெற்றி பெற்று அமைத்த அரசில் வாஜ்பாய் பிரதமரானார். இருப்பினும் பா.ஜ.க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால், 13 நாட்களில் வாஜ்பாய் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி, 1998 இல் நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வென்றது. இம்முறை பா.ஜ.க ஏற்கனவே இருந்த கூட்டணிக் கட்சிகளான சமதா கட்சி, சிரோமனி அகாலி தளம், சிவ சேனா போன்றவற்றோடு சேர்த்து, அதிமுக மற்றும் பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகளோடும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இவற்றுள் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவ சேனா மட்டுமே பா.ஜ.க வுடன் ஒத்த கொள்கையுடைய கட்சியாகும். தெலுங்கு தேசம் கட்சி இக்கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்தது. மெலிதான பெரும்பான்மை பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வாஜ்பாயைப் பிரதமராகக் கொண்டு ஆட்சி அமைத்தது. ஆனால், அதிமுக தலைவர் ஜெயலலிதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதால் கூட்டணி உடைந்து மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. 

கார்கில் போரில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து வாஜ்பாய்க்கு கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாக, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 1999 ஆம் நடந்த பொதுத் தேர்தலில் 303 இடங்களில் வென்றது. பா.ஜ.க மட்டுமே 183 இடங்களில் வென்றது. வாஜ்பாய் மூன்றாவது முறையாகப் பிரதமராக பதவியேற்றரார். இம்முறை, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது ஆட்சிக்காலமான ஐந்து ஆண்டுகளும் நீடித்தது.  

இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பல அரசுடைமை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கியதோடு, உலக வர்த்தக அமைப்பின் வழிகாட்டுதல்களையும் நடைமுறைப்படுத்தியது. விமான நிறுவனங்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளை நீக்கியது, அந்நிய முதலீடுகளை அனுமதித்தது போன்ற கொள்கைகள் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாகத் துணை புரிந்ததோடு, புதிய துணை நகரங்கள் உருவாகவும், உள்கட்டமைப்பு சிறக்கவும், உற்பத்தியும் ஏற்றுமதியும் உயரவும் வழிவகுத்தது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி, 2004 இல் நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் எதிர்பாராத விதமாகத் தோல்வியைத் தழுவியது. கர்நாடகாவில், மே 2008 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வென்றது. இதுவே தென்னிந்திய மாநிலமொன்றில் பா.ஜ.க வென்றது முதல் முறையாகும். ஆனால் 2013 ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தோற்று தனது ஆட்சியைக் காங்கிரசிடம் இழந்தது. 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற  தேர்தலில் பா.ஜ.க மீண்டும் தோற்றதனால், மக்களவையில் அதன் பலம் 116 ஆகக் குறைந்தது. ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தராகண்ட் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறைந்த செயல்பாடே அக்கட்சியின் தோல்விக்குக் காரணம் என்று கூறப்பட்டது. 

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 334 மக்களவைத் தொகுதிகளில் வென்றது. பா.ஜ.க. மட்டுமே 282 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது.  ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்களுக்கும் 10 இடங்கள் மிகுதியாக வென்றதால் தனிப்பெரும்பான்மையோடு கூட்டணிக் கட்சிகளின் துணை இல்லாமலே தனித்து ஆட்சி அமைத்தது.  

1998, 1999 லிருந்து 2004 வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு தலைமையேற்றபோது, அக்கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் மதித்து அரவணைத்து கருத்துக்களைப் பரிமாறி, ஒரு கூட்டணி ஆட்சி எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தார். இந்தியாவின் உயரிய பாரத் ரத்னா விருதினை, 27 மார்ச் 2015 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரும் மற்றும் இந்தியப் பிரதமரும், வாஜ்பாயின் இல்லம் சென்று வழங்கி கௌரவித்தனர்.

சாதித்தது...

இந்திய அரசியலில் அழுத்தமான கால்தடத்தைப் பதித்துள்ள தலைவர்களின் முக்கியமானவராகக் கருதப்படுபவர். 

நாட்டின் பிரதமர் பதவியை வாஜ்பாய் ஒருநாள் அலங்கரிப்பார் என்று முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவால் புகழப்பெற்ற பெருமை பெற்றவர்.

நாட்டின் பிரதமராக குறைந்த காலமே பதவி வகித்தாலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டினை அணு ஆயுத நாடாக அறிவித்து உலகையே இந்தியா என்ற பெயரை உச்சரிக்கச் செய்தவர். 

மாநிலங்களவை உறுப்பினராக 1962ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்த வாஜ்பாய், மக்களவை உறுப்பினராக 7 முறையும், மாநிலங்களவை உறுப்பினராக இருமுறையும் பதவி தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ஐக்கியநாடுகள் சபையில் இந்தியில் உரையாற்றிய முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் முதல் பிரதமர் வாஜ்பாய்.

முதல்முறையாக காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து ஜனதா கட்சி 1977-ல் அரியணை ஏறிய போது வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

நாட்டின் பிரதமராக முதல்முறையாக வாஜ்பாய் கடந்த 1996ம் ஆண்டு மே 16ம் தேதி பதவியேற்றபோது, அவரது பதவிக்காலம் மே 28ம் தேதி வரையில் 13 நாட்கள் மட்டுமே நீடித்தது. 

இரண்டாவது முறையும் வாஜ்பாயின் பிரதமர் பதவிக்காலம் அதிக காலம் நீடிக்கவில்லை. 

1999ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று அக்டோபர் 13ம் தேதி நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார். அந்தமுறை பதவிக்காலம் முழுமையையும் வாஜ்பாய் பூர்த்தி செய்தார்.

ஆட்சிக்கலாத்திலேயே பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. 

பொக்ரான் அணுஆயுத சோதனை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவால் சாத்தியமானது. 

நாட்டின் 10ஆவது பிரதமராக கடந்த 1998ம் ஆண்டில் அவர் பதவியேற்றார்.

பதவிக்காலம் முழுவதையும் நிறைவு செய்த காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் பிரதமர் எனும் சாதனைக்கு சொந்தக்காரர் வாஜ்பாய். 

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேருந்து சேவையை அறிமுகப்படுத்திய பெருமை வாஜ்பாயையே சேரும். 

தலைசிறந்த கவிஞர், நகைச்சுவை உணர்வு மிக்கவர். 

வங்கதேச யுத்த வெற்றிக்குப் பின், பிரதமர் இந்திராகாந்தியை நாடாளுமன்றத்தில் “துர்காதேவியே, வெற்றித் தேவைதையே” என வாழ்த்தியவர்.

நெருக்கடி நிலை காலத்தில் 18 மாதம் பெங்களூர் சிறையில் வாடினார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு தன் வேதனையையும், எதிர்ப்பையும் நாடாளுமன்றத்திலேயே பதிவு செய்தார். 

1999 ஆம் ஆண்டில் அனைத்துக் கட்சி நாடாளுமன்றத் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, அதில் “இலங்கை அரசுக்கு எவ்விதத்திலும் இந்திய அரசு உதவி செய்யாது; ஆயுதங்களை சிங்கள அரசுக்கு ஒருபோதும் விற்பனை செய்யாது” என்று கொள்கை முடிவை அறிவித்தார்.

 தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது பொடா சட்டப்பபடி குற்றம் ஆகாது என்று இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யுமாறு நடவடிக்கை எடுத்தவர்.