உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து இந்திய விமானப்படை தளங்கள் மற்றும் தலைநகர் டெல்லி உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய இடங்களில் சிறப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2  யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் சட்ட  மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு இதன் மூலம் ஜம்மு - காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணைக்கப்பட்டு, மற்ற மாநிலங்களை போலவே  மத்திய அரசின் திட்டங்களை நேரடியாக செயல்படுத்த வழிவகை செய்யப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. அவ்வப்போது பிரதமர் இம்ரான் கான் மிரட்டல் விடுத்து வந்தார்.

இதனடிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அத்துமீறலுக்கு, இந்திய வீரர்கள் உடனடியாக பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனிடையே, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளை ஊடுருவ செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில், காஷ்மீர், தலைநகர் டெல்லி மற்றும் அதைச்சுற்றிலும் உள்ள விமானப்படை தளங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கு ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 8 முதல் 10 தீவிரவாதிகள் வந்து தற்கொலை தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம் எனவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக 2-வது மிகப்பெரிய எச்சரிக்கையான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து, டெல்லியில் முக்கிய இடங்களில், போலீசாரின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர். நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதுடன், தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்தியா முழுவதும் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.