நாட்டில் வறட்சி, விவசாயிகள் தற்கொலை ஆகியவற்றை குறைப்பதற்காக மத்திய அரசு பயிர்காப்பீடு திட்டத்தை கொண்டு வந்தபோதிலும், அதை மாநில அளவில் செயல்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகளால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ரூ.10 ஆயிரம் கோடி லாபம் அடைந்துள்ளன எனத் தெரியவந்துள்ளது.

இந்த லாபம் கடந்த ஆண்டின்  கடைசி 6 மாதங்களில் கிடைத்ததாகும். 
இருப்பினும் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை செட்டில்மென்டில் 3-ல் ஒரு பகுதிமட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

வறட்சி போன்றவற்றில் இருந்து விவசாயிகளைக் காக்க பிரதமர் பசல் பீமா யோஜனா திட்டத்தை மத்தியஅரசு கொண்டு வந்தது. இந்த திட்டம் மத்தியஅரசு, மாநில அரசுகளின் மானியத்துடன் செயல்படுத்தக்கூடியது.

இந்நிலையில், மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை இந்த காப்பீடு திட்டத்தை மாநிலங்கள் அளவில் நடைமுறைப்படுத்தும் போது, ஏற்படக்கூடிய குளறுபடிகளை ஆய்வு செய்து அறிக்கை வௌியிட்டுள்ளது. இதற்காக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், மற்றும் இந்திய காப்பீடு ஒழுங்கு முறை ஆணையத்திடம் இருந்து தகவல்களை பெற்று அறிக்கை வௌியிட்டுள்ளது.

அதன்படி, 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 32.45 சதவீதம் வரை மட்டுமே விவசாயிகளுக்கு இழப்பீட்டை வழங்கி இருக்கின்றன. ஏறக்குறைய விவசாயிகள்தரப்பில் ரூ.6 ஆயிரம் கோடி இழப்பீடு கோரப்பட்டதில் ரூ. 2 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ப்ரியமியம் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.15 ஆயிரத்து 891 கோடி செலுத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறு அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.