உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, உயர்மட்ட தொழில்நுட்பக் குழு அக்டோபர் 7 ம் தேதி கர்நாடகா காவிரி பாசன பகுதியில் ஆய்வு செய்கிறது. 

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அக்டோபர் 7 ம் தேதி முதல் அக்டோபர் 18ம் தேதி வரை நாள்தோறும் 2000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவிற்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழகம் மற்றும் கர்நாடக அணைகளின் நீர் இருப்பை ஆய்வு செய்ய மத்திய நீர்வள ஆணைய தலைவர் தலைமையில் குழுவை அமைக்க வேண்டும்.

குழுவில் 4 மாநில தலைமை செயலாளர், தலைமை பொறியாளர்கள் இடம் பெறுவர். மத்திய அரசின் தரப்பில் இருந்து ஒரு பொறியாளரும் குழுவில் இடம் பெறுவர்.

இந்த குழு ஆய்வு செய்து 17ம் தேதிக்குள் அறிக்கை தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, உயர்மட்ட தொழில்நுட்பக் குழு அக்டோபர் 7 ம் தேதி கர்நாடகா காவிரி பாசன பகுதியில் ஆய்வு செய்கிறது.

காவிரி படுகைகளில் ஆய்வு செய்ய மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ். ஜா தலைமையில் உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு உறுப்பினர்கள் மசூத் ஹுசைன், குப்தா உள்ளிட்டோரும் ஆய்வு மேற்கொள்கின்றனர். இந்த குழுவுடன் இணைந்து 4 மாநில தலைமை பொறியாளர்களும் ஆய்வு நடத்த உள்ளனர்.

இந்த உயர்மட்ட தொழில்நுட்ப குழுவானது காவிரி படுகைகளில் ஆய்வு செய்து, தனது அறிக்கையை வரும் 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது.

இந்த குழுவின் அறிக்கைக்கு பிறகு, காவிரி விவகாரம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.