ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் அப்ரூவராக மாறியதால் இந்திராணி முகர்ஜிக்கு மன்னிப்பு வழங்கப்படுவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனின் பதவியை பறிக்க பாஜக தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்களான பீட்டர் முகர்ஜியும், இந்திராணி முகர்ஜியும் தங்களது சொந்த மகள் ஷீனா போராவை கொடூரமாக கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 2007-ம் ஆண்டில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் வெளிநாட்டில் முதலீடுகளை திரட்டியது. இதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இருந்த அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் விதிகளை மீறி முறைகேடாக அனுமதி வழங்கியதாக சிபிஐ மற்றும் அமலாகத்துறையினர் குற்றம்சாட்டினர். 

இந்த விவகாரத்தில் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் வலியுறுத்தலின் பேரில் மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் முறைகேட்டில் உதவியதாக சிபிஐ மற்றும் அமலாகத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் தான் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீதான முறைகேடு வழக்கில் அப்ரூவராக மாற இந்திராணி சம்மதம் தெரிவித்தார். இதனால் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்திராணி சிபிஐயிடம் ஒரு வாக்குமூலத்தை அளித்தார். இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ப.சிதம்பரம் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். 

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி உள்ளிட்ட 14 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டது. 

இதனிடையே, அப்ருவராக மாறிய இந்திராணி முகர்ஜிக்கு சிபிஐ மன்னிப்பு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் இது தொடர்பான விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதான பிடி இறுகி வருகிறது. மேலும், இருவரின் எம்.பி. பதவியையும் பறிக்க பாஜக மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது.