India voting error in favor of the UN resolution in the Jerusalem case is a big mistake
ஜெருசலேம் விவகாரத்தில் ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்து மிகப் பெரிய தவறு செய்து விட்டது என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார்.
இஸ்ரேல் தலைநகர்
ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வந்தன. இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில் ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது.
இதற்கு முஸ்லிம் நாடுகள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெற வேண்டும் என்று ஐ.நா. சபை கேட்டுக்கொண்டது.
இந்தியா ஆதரவு
ஆனால் அமெரிக்கா அதற்கு திட்டவட்டமாக மறுத்து விட்டது. இந்நிலையில் ஜெருசலேம் அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா உள்பட 128 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
அமெரிக்காவுக்கு ஆதரவாக வெறும் 9 நாடுகள் மட்டும் வாக்களித்தன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதையடுத்து ஐ.நா. சபை கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சுப்பிரமணியசாமி
இந்நிலையில், இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, “பாலஸ்தீனுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
காஷ்மீர் விவகாரம், தீவிரவாதம் உள்ளிட்ட விஷயங்களில் பாலஸ்தீனம் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தது இல்லை. இஸ்ரேலே நமக்கு உறுதுணையாக இருந்துள்ளது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து, மிகப் பெரிய தவறை இந்தியா செய்துவிட்டது” என்று பதிவிட்டுள்ளார்.
மேற்கு ஜெருசலேமில்..
மற்றொரு பதிவில் “மேற்கு ஜெருசலேம் இஸ்ரேலின் ஆளுகைக்கு உள்பட்ட பகுதி என ஐ.நா சபை ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், இந்தியா தனது தூதரகத்தை அங்கே ஏன் மாற்றக்கூடாது?”.
மேற்கு ஜெருசலேம் இஸ்ரேலுக்கானது, தூதரகம் அங்கே தான் அமைய வேண்டும்” என்று காரசாரமான கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
