உக்ரைன் தலைநகர் கீவ்வின் மீது ரஷிய படைகள் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்தியர்கள் அந்த நகரத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ்வின் மீது ரஷிய படைகள் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்தியர்கள் அந்த நகரத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா பின்வாங்க தயாராக இல்லை. ஒருபுறம் பேச்சு நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தபோதும், அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷியா இறங்கி உள்ளது. இந்த சூழலில் கீவ் நகர் அருகே ரஷிய ராணுவ படைகள் நெருங்கி உள்ளன. இந்த படைகள் வரிசையாக 40 மைல்கள் தொலைவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இதனிடையே கீவ் உக்ரைனில் நடந்து வரும் ரஷிய ராணுவ நடவடிக்கைக்கு மத்தியில், தற்போது கெர்சன் நகரை ரஷியா ராணுவம் தாக்கத் தொடங்கியுள்ளது. போர் தீவிரமடைந்திருக்கும் இந்த சூழலில் அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மக்கள் மற்றும் மாணவர்களை மீட்பதற்காக மத்திய அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஆபரேசன் கங்கா மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நான்கு மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வின் மீது ரஷிய படைகள் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்தியர்கள் அந்த நகரத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அனைவரும், இன்றைக்குள், கீவ் நகரில் இருந்து அவசரமாக வெளியேற வேண்டும் என்றும், கிடைக்கக்கூடிய ரயில்கள் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வழிகள் மூலமாகவோ வெளியேற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அண்டை நாடுகளின் உதவியுடன் ஏர் இந்தியாவின் விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு வரும் நிலையில், மீட்புப் பணியில் விமானப்படையும் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் சி17 ரக போர் விமானங்களை மீட்புப் பணியில் ஈடுபடுத்த பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறுகிய நேரத்தில் ஏராளமானோரை அழைத்து வர வசதியாக சி17 ரக விமானத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
