கடல் வழியான வர்த்தகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும், எந்தவொரு திடீர் நெருக்கடிக்கும் பதிலளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை இந்திய கடற்படை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க படைகள் ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தி ஈரானின் முக்கிய தளபதிகளில் ஒருவரான காசிம் சுலைமானியை கொன்றது. 

இது ஈரானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக ஈராக்கில் அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது.இதனால் அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

இந்த சூழ்நிலையில் இந்திய கடற்படை வளைகுடா பகுதிக்கு போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது. இது தொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கடற்படை போர்க்கப்பல்களும், விமானங்களும் இருப்பை நிலைநாட்டவும், இந்திய வணிகர்களுக்கு பாதுகாப்பான உணர்வை வழங்கவும், நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையை கண்காணிக்கவும், வெளிவரும் எந்தவொரு நெருக்கடிகளுக்கும் பதிலளிக்கவும் பயன்படுத்தபட உள்ளன.


மேலும், நாட்டின் கடல்சார் நலன்களை பாதுகாப்பதில் இந்திய கடற்படை உறுதியாக உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அரபி கடல் பகுதியில் சீனாவும், பாகிஸ்தானும் கூட்டுபயிற்சியின்போது அதிகளவில் நீர்மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவுக்கு கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.