உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. இதுவரையில் 600க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. 21 நாட்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக கடைகள், வணிக வளாகங்கள், பொது போக்குவரத்துகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி ரயில் சேவையும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ரத்தாகி இருக்கிறது. 167 ஆண்டுகால ரயில்வே வரலாற்றில் ரயில்கள் நாடுமுழுவதும் நிறுத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். இந்திய ரயில் சேவை கடந்த 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 17 ரயில்வே மண்டலங்கள் இருந்துவருகின்றன. அவற்றில் தினமும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த 22ம் தேதியில் இருந்து ஏப்ரல் 14ஆம் தேதி வரை 24 நாட்களுக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 1901ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி விக்டோரியா மகாராணியின் மரணத்தை அடுத்து இந்திய ரயில் சேவை முதன்முறையாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு 1948ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி தேசத்தந்தை மகாத்மா காந்தியின் மரணத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இவ்வாறு இரண்டு பெரிய தலைவர்களின் மறைவுக்காக மட்டுமே ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மக்கள் நலனிற்காக கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மூன்றாவது முறையாக நிறுத்தப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக தொடர்ந்து 24 நாட்கள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது இந்திய வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும். பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்த போதும் சரக்கு ரயில்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் வகையில் சரக்கு ரயில் சேவை நடந்து வருகிறது.