உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரொனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதுவரையில் 1638 பேர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் 45 பேர் பலியாகி இருக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் சமூக விலகளை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கடைகள், வணிக வளாகங்கள், பொது போக்குவரத்துகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் போக்குவரத்துகள் ஊரடங்கு அமல்படுத்தப்பவதற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டது. சரக்கு ரயில்கள் மட்டுமே பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போது இல்லை என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதனால் 15-ஆம் தேதி முதல் ரயில் பயணத்திற்கான முன்பதிவு ஆன்லைன் மூலமாக தொடங்க இந்திய ரயில்வே வாரியம் முடிவு எடுத்திருக்கிறது.

இதுகுறித்து ரயில்வே வாரிய அதிகாரிகள் கூறும்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அனைத்து பயணிகள் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டு சரக்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும் ரத்து செய்யப்பட்ட நாட்களில் ஏற்கனவே ரயில்களில் முன்பதிவு செய்த கட்டணம் முறையாக திருப்பி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். தற்போது ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு இல்லை என மத்திய அரசு அறிவித்து இருப்பதால் 15ஆம் தேதிக்கு பிறகு ரயில் பயணத்தை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய தொடங்கப்பட்டு இருப்பதாக கூறிய அதிகாரிகள் ரயில்நிலைய கவுன்ட்டர்களில் ஏப்ரல் 15ஆம் தேதி காலை முதல் முன்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினர். இது முழுக்க முழுக்க தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்றும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில் அதற்கு ஏற்ப திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.