பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்தியப் போர்க்கப்பல்கள் பல வெற்றிகரமான ஒத்திகைகளை நடத்தியுள்ளன. இது இந்திய கடற்படையின் திறமையையும், சாத்தியமான தாக்குதல்களை எதிர்கொள்ள தயார்நிலையில் இருப்பதையும் நிரூபித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்த நிலையில், இந்தியப் போர்க்கப்பல்கள் பல வெற்றிகரமான ஒத்திகைகளை நடத்தியுள்ளன. இந்த ஒத்திகைகள் நீண்ட தூர துல்லியமான தாக்குதல்களை மேற்கொள்வதில் இந்திய கடற்படையின் திறமையையும், சாத்தியமான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு தயார்நிலையில் இருப்பதையும் நிரூபித்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமை எக்ஸ் தளத்தில் இந்தியக் கடற்படையால் வெளியிடப்பட்ட பதிவில், கடற்படை நாட்டின் கடல்சார் நலன்களைப் பாதுகாக்கப் போருக்குத் தயாராக இருப்பதாகக் கூறியதுடன், ஒத்திகையின் பல காட்சிகளைப் பகிர்ந்துள்ளது.

இந்தியக் கடற்படை ஒத்திகை:

அதிகாரிகளின் கூற்றுப்படி, கடற்படை ஏற்கனவே ஏவுகணை ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் கடற்படை நடத்திய எதிரிகளின் கப்பல்களை எதிர்ப்பதற்கான ஒத்திகை இந்தியா போருக்கு தயாராக இருப்பதைக் காட்டுகிறது. அதே நேரத்தில் இந்த ஒத்திகைகள் துறைமுகங்களுக்குள் நுழையவில்லை என்று ஒரு அதிகாரி கூறினார்.

Scroll to load tweet…

ஒத்திகையில் கலந்துகொண்ட போர்க்கப்பல்களில் கொல்கத்தா வகுப்பு அழிப்புக் கப்பல்கள், நீலகிரி வகுப்பு மற்றும் கிரிவக் வகுப்பு போர்க்கப்பல்கள் ஆகியவை அடங்கும். கடற்படையின் டேங்கர்கள், அதன் சமீபத்திய விமானம் தாங்கிக் கப்பல் INS விக்ராந்த் மற்றும் கடல்சார் ரோந்து விமானம் P-8I ஆகியவையும் அரபிக்கடலில் நடந்த ஒத்திகையில் பங்கெடுத்துள்ளன.

வியாழக்கிழமை, கடற்படையின் உள்நாட்டு ஏவுகணை அழிப்பான் ஐஎன்எஸ் சூரத், அரபிக் கடலில் நடுத்தர தூர வான் இலக்கைத் தாக்கும் திறனை வெற்றிகரமாக சோதித்துள்ளது. அரபிக் கடலில் ஏவுகணை சோதனை நடத்துவதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இந்தியா இந்த கடற்படை ஒத்திகையை நடத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதில்:

ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியா பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானைக் குற்றம்சாட்டி அதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக காஷ்மீர் முழுவதும் பாதுகாப்புப் படையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். ராணுவத் தளபதி உபேந்திர திவேதி காஷ்மீருக்குச் சென்று பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்தார். பாகிஸ்தானியர்களுகுக விசா ரத்து, சிந்து நதி நீர் பகிர்வு நிறுத்திவைப்பு போன்ற குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்துள்ளது. தூதரக உறவுகளையும் குறைத்துக்கொள்வதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.