காஷ்மீரில் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் தீவிரவாதி நடத்திய கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இந்தச் சம்பவத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது  தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படையினர் குண்டு வீசி அழித்துவிட்டுத் திரும்பினர்.

அப்போது வான்வழியில் விமானப்படை வீரர் அபிநந்தன் செலுத்திய மிக்-21 விமானமும், பாகிஸ்தானின் எப்-16 விமானமும் சண்டையில் ஈடுபட, பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தி அபிநந்தன் பாகிஸ்தான் பகுதியில் பாராசூட் மூலம் குதித்தார்.

இந்தச் சம்பவத்தின் இடையே காஷ்மீர் பட்காம் பகுதியில் இந்திய விமானப்படையினர் தீவிரக் கண்காணிப்பில் இருந்தனர். அப்போது, இந்திய விமானப்படையின் எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் வானில் பறந்து வந்தது. பாகிஸ்தானின் ஹெலிகாப்டர் என நினைத்த இந்திய விமானப்படையினர் அதைச் சுட்டு வீழ்த்தினர். இதில் ஹெலிகாப்டரில் இருந்த 6 விமானப்படை வீரர்களும் பலியானார்கள்.

இந்தச் சம்பவம் குறித்து அந்த நேரத்தில் பெரிதாக செய்திகள் கசியவில்லை என்ற போதிலும், விமானப்படைக்குள் விசாரணை நடந்து வந்தது. இந்த சூழலில் விமானப்படைத் தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா இன்று புதுடெல்லியில் நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். 

அப்போது  கடந்த பிப்ரவரி 27-ம் தேதி பதான்கோட் தாக்குதலுக்குப் பின் நமது விமானப்படை வீரர்கள் தீவிரக் கண்காணிப்பில் இருந்தார்கள். அப்போது வானில் நமது எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் சென்றதைக் கவனிக்காமல் அது எதிரிநாட்டு ஹெலிகாப்டர் என தவறுதலாக நினைத்து நம்முடைய ஏவுகணை மூலம் அந்த ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதில் ஹெலிகாப்டரில் இருந்த 6 விமானப்படை வீரர்களும் பலியானார்கள். நமது ஹெலிகாப்டரை நாமே சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய தவறு. இந்த தவறைச் செய்த 5 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற விசாரணை நடந்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. 

விரைவில் விமானப்படை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற தவறுகள் வரும்காலத்தில் வராமல் பாரத்துக்கொள்வோம் என தெரிவித்தார்.