சீன ராணுவ வீரர்களை ஓட விட்ட இந்திய மேய்ச்சல்காரர்கள்!
சீன ராணுவ வீரர்களை எல்லைக்கு அருகே இந்தியாவை சேர்ந்த மேய்ச்சல்காரர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமான எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்திய பகுதிகளை சீன ராணுவத்தினர் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், லடாக்கை சேர்ந்த மேய்ச்சல்காரர்கள் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகே ஆடுகளை மேய்ப்பதைத் தடுக்க முயன்ற சீன வீரர்களை தைரியமாக எதிர்த்து நின்று சண்டையிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு நிகழ்ந்த கல்வான் மோதலைத் தொடர்ந்து உள்ளூர் மேய்ச்சல்காரர்கள், இந்த பகுதியில் தங்களது கால்நடைகளை மேய்ப்பதை நிறுத்திவிட்ட நிலையில், சீன துருப்புகளுடன் துனிச்சலாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாங்கள் இந்திய எல்லையில் இருப்பதாக உறுதிப்படுத்தும் வீடியோ காட்சிகள் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக கிழக்கு லடாக்கில் உள்ள நாடோடிகள் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பகுதிகளில் தங்களது கால்நடைகளை மேய்ப்பதை நிறுத்திவிட்டனர். இப்பகுதியில் அவர்கள் தங்கள் மேய்ச்சல் உரிமையை நிலைநாட்டுவதும், சீன வீரர்களை பின்வாங்கச் செய்வதும் இதுவே முதல் முறையாகும்.
Chushul பகுதி கவுன்சிலர் Konchok Stanzin என்பவர் உள்ளூர் மேய்ச்சல்காரர்கள் காட்டிய எதிர்ப்பையும், அவர்களது தைரியத்தையும் பாராட்டியுள்ளனர். மேலும், அவர்களுக்கு ஆதரவளித்த இந்திய ராணுவத்தினருக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். “கிழக்கு லடாக்கின் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவம் வடக்கு கட்டளையின் Fire and Fury வீரர்கள் உதவியுடன் பாங்காங்கின் வடக்குக் கரையில் உள்ள பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களில் மேய்ச்சல்காரர்கள் மற்றும் நாடோடிகள் தங்கள் உரிமைகளை நிலைநிறுத்தியை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.” என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பொதுமக்கள் மற்றும் ராணுவத்துக்கு இடையே இத்தகைய வலுவான உறவுகளுக்காகவும், எல்லைப் பகுதி மக்களின் நலன்களைப் பேணுவதற்காகவும் இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தினரின்ப் உதவியுடன் சீன வீரர்களை மேய்ச்சல்காரர்கள் தைரியமாக எதிர்கொண்டனர் எனவும் Chushul பகுதி கவுன்சிலர் Konchok Stanzin கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், மூன்று சீன ராணுவ வாகனங்கள் உள்ளன. அந்த வாகனங்களில் இருந்து ஹாரன் சத்தம் வந்து கொண்டே இருக்கிறது. மேய்ச்சல்காரர்களை வெளியேறும்படி சீன வீரர்கள் சமிக்ஞை செய்கிறார்கள். ஆனால், அங்கிருந்து வெளியேற மறுக்கும் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து சீன வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். தாங்கள் இந்திய நிலப்பரப்பில் மேய்ந்து வருவதாகவும் அவர்கள் தைரியமாக சுட்டிக்காட்டுகின்றனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி, மேய்ச்சல்காரர்கள் அங்கிருந்த கற்களை எடுக்கின்றனர். ஆனால், தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. பெரிய அளவில் வன்முறை வெடிக்கவில்லை. சீன வீரர்களும் ஆயுதம் இல்லாமலேயே அந்த வீடியோவில் காட்சியளிக்கின்றனர்.