இந்தியாவில் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,706 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1395 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக மார்ச் மாத மத்தியிலிருந்தே விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. 

அதன்பின்னர் தான் ஊரடங்கே அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர், விமான போக்குவரத்து ரத்து தொடரப்பட்டது. எனவே இந்தியாவில் இருந்து யாரும் வெளிநாடு செல்ல முடியாத சூழலும், வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் இந்தியாவிற்கு வர முடியாமலும் தவித்துவந்தனர். 

இந்தியர்கள் உலகம் முழுதும் பல நாடுகளில் பணியாற்றிவருகின்றனர். குடும்பங்களை பிரிந்து வெளிநாடுகளில் பணியாற்றுபவர்கள், பணி நிமித்தமாக தற்காலிகமாக வெளிநாடு சென்றவர்கள், வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றவர்கள் ஆகியோர் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் தவித்துவரும் நிலையில், இந்தியாவிற்கு திரும்ப விரும்புபவர்களின் தகவல்களையும் பட்டியலையும் சேகரித்துவருகிறது. 

வரும் 7ம் தேதியிலிருந்து வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு வர விரும்பும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ளுமாறும், இந்தியாவிற்கு வருவதற்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளம் நாளை அல்லது நாளை மறுநாள் தெரிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை ஏர் இந்தியா விமானங்களை அனுப்பியும் கப்பல்களிலும் மீட்டு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.