இந்தியா  - சீனா இடையேயான உறவு, எல்லை பிரச்னையால் ஏற்கனவே சுமூகமாக இல்லாத நிலையில், கடந்த ஜூன் 15ம் தேதி சீன ராணுவம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறி நடத்திய தாக்குதலின் விளைவாக, இரு நாடுகளின் உறவில் விரிசல் அதிகரித்தது. 

அதன் விளைவாக, சீனாவுடனான வர்த்தக மற்றும் பொருளாதார கொள்கைகளில் நிறைய மாற்றங்களை முன்னெடுத்து சீனாவிற்கு பதிலடி கொடுத்தது. கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் ராணுவத்தை குவிக்க, பதற்றம் அதிகரித்தது.

பதற்றத்தை தணிக்க, இரு நாடுகளின் கமாண்டோக்கள் மட்டத்திலான சிலகட்ட பேச்சுவார்த்தைகளின் விளைவாக, இருநாடுகளும் தங்களது படைகளை கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்கியது. 

இந்நிலையில், லடாக்கின் முன்னாள் பாஜக எம்பி துப்ஸ்டன் செவாங் கூறியதாக ஹிந்து ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தி பரபரப்பை கிளப்பியது. ஆனால் அந்த செய்தி பொய்யானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

”எல்லை விவகாரம் மோசமாக உள்ளது. சீன ராணுவம் அத்துமீறியிருப்பது மட்டுமல்லாது, பாங்காங் சோ பகுதியில் ஃபிங்கர் 2 மற்றும் 3 பகுதிகளை கைப்பற்றியும் இருக்கிறது. அந்த பகுதிகளிலிருந்து நமக்கு கிடைத்திருக்கும் தகவல்” என்று செவாங் குறிப்பிட்டதாக ஹிந்து ஆங்கில ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டது.

இந்த செய்தி தவறானது என்று இந்திய ராணுவம் மறுத்துள்ள நிலையில், மத்திய அரசின் சார்பில் இந்த செய்தியின் உண்மைத்தன்மை ஆராயப்பட்டது. அதிலும், இது பொய்யான செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.