கத்தார் சிறையில் உள்ள 8 மரண தண்டனைக் கைதிகளைச் சந்தித்த இந்தியத் தூதர்

இந்தியாவின் மேல்முறையீட்டு மனு மீதான அடுத்த விசாரணை விரைவில் நடைபெறவுள்ள நிலையில், சிறையில் உள்ளவர்களை இந்தியத் தூதர் சந்தித்திருப்பது ஒரு நேர்மறையான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. 

Indian Envoy Meets 8 Navy Veterans On Death Row In Qatar sgb

கத்தாரில் உள்ள இந்தியத் தூதர் அந்நாட்டு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் எட்டு முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்களை சந்தித்துப் பேசியுள்ளார். கடந்த அக்டோபரில் எட்டு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், டிசம்பர் 3ஆம் தேதி சிறையில் உள்ள 8 பேரையும் சந்திக்க நமது தூதருக்கு தூதரக அனுமதி கிடைத்தது என்று தெரிவித்துள்ளார். எட்டு பேரின் மரண தண்டனைக்கு எதிராக இந்தியா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதைப் பற்றிக் கூறிய அரிந்தம் பாக்சி, "இந்தியாவின் மேல்முறையீட்டு குறித்து இதுவரை இரண்டு விசாரணைகள் நவம்பர் 23 மற்றும் நவம்பர் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றுள்ளன. நாங்கள் இந்த விஷயத்தை உன்னிப்பாகப் பின்பற்றி, அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் வழங்குகிறோம். இது ஒரு முக்கியமான விஷயம். எங்களால் முடிந்ததைச் செய்வோம்" என்று கூறியிருக்கிறார்.

அடுத்த விசாரணை விரைவில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சிறையில் உள்ளவர்களை இந்தியத் தூதர் சந்தித்திருப்பது ஒரு நேர்மறையான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. எட்டு பேரின் நிலை குறித்த கவலைகளுக்கு விடை கொடுக்கும் வகையில் இந்த நகர்வு அமைந்துள்ளது.

இந்தியா மேல்முறையீடு செய்ததில் இருந்து இரண்டு விசாரணைகள் நடந்திருப்பதும் ஒரு சாதகமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

கத்தாரில் உள்ள தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் ஆயுதப் படை பயிற்சி மற்றும் சேவைகளையும் வழங்குகிறது. இந்நிறுவனத்தில் இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வெர்மா, கேப்டன் சவுரப் வஷிஷ்ட், கமான்டர் அமித் நாக்பால், கமான்டர் புர்னேந்து திவாரி, கமான்டர் சுகுநகர் பகாலா, கமான்டர் சஞ்சீவ் குப்தா, கடற்படை வீரர் ராகேஷ் ஆகிய எட்டு பேர் பணிபுரிந்து வந்தனர்.

இவர்கள் கத்தார் நாட்டின் சக்திவாய்ந்த நீர்மூழ்கிக் கப்பல் குறித்த ரகசியங்களை இஸ்ரேஸ் ராணுவத்துக்குப் பகிர்ந்தனர் என்று குற்றம் சாட்டப்படுகிறது. கத்தார் உளவுத்துறை சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்களைக் கைது செய்தது. செப்டம்பர் மாதம் இவர்கள் கைதானது குறித்த விவரம் இந்திய அரசுக்கும் எட்டு பேரின் குடும்பத்தினருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios