பண நோட்டின் மதிப்பிழப்பு நடவடிக்கையால், இந்தியப் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது என மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
 பெங்களூரில் உள்ள சித்ரகலா பரிஷத்தில் இந்திய மக்களை ஓட்டாண்டியாக்கிய பண மதிப்பிழப்பு என்ற தலைப்பில், புகைப்பட பத்திரிகையாளர் வெங்கடேஷ் தொகுத்திருக்கும் புகைப்படக் கண்காட்சி நேற்று நடந்தது. அந்த நிகழ்ச்சியை தொடக்கி வைத்து, செய்தியாளர்களிடம் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள பண விவகார நடவடிக்கை, இந்திய பொருளாதாரத்தை முழுமையாக சீர்குலைத்துள்ளது. பிரதமர் மோடியின் முடிவால் உண்மையில் பாதிக்கப்பட்டது ஏழைகள்தான். கருப்புப் பணத்தையும், ஊழலையும் ஒழிக்கப்போவதாக கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது. இதன் பின்விளைவுகளை நாடு எதிர்கொண்டுள்ளது.

ஆரம்பத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு அளித்தனர். அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், சில நாட்களில் அதன் பாதிப்புகள் தென்படத் தொடங்கியதும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மக்கள் எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.

விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் ஏழைகளைத் தவிக்கவிட்டு, பணக்காரர்களை பாதுகாக்கிறது மத்திய அரசு.

 பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 125 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், 30 கோடி மக்களிடம் மட்டுமே வங்கிக் கணக்கும், பற்று அல்லது கடன் அட்டையும் உள்ளன. இந்த நிலையில், 100 சதவீத பணமில்லா பரிவர்த்தனையை எப்படி சாத்தியமாக்க இயலும்?

 செல்போன் மூலம் பணப் பரிவர்த்தனைகளை செய்யுமாறு பிரதமர் மோடி கூறுகிறார். இதன் மூலம் தனக்கு வேண்டிய செல்போன் நிறுவனங்களுக்கு சாதகமாக அவர் செயல்படுவது உறுதியாகியுள்ளது. முன்யோசனை, முன்னேற்பாடுகள் எதுவும் இல்லாமல் அவசர கதியில் பிரதமர் மோடி எடுக்கும் முடிவுகள் மக்களைப் பாதித்துள்ளது.

 பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து, இதர கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்கான கூட்டம் புதுடெல்லியில் நாளை (இன்று) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் போராட்டத்தின் வடிவம் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.