ஜி20க்கு வந்த ஜஸ்டின் ட்ரூடோ விமானத்தில் கொக்கைன்: முன்னாள் தூதர் பகீர்!
ஜி20 உச்சி மாநாட்டுக்கு வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விமானத்தில் கொக்கைன் நிறைந்திருந்ததாக முன்னாள் தூதர் ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்
கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், இந்தியாவில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையின் பின்னணியில் இந்திய அரசுக்கான தொடர்புகள் இருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதனால், இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாட்டுக்கு வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விமானத்தில் கொக்கைன் நிறைந்திருந்ததாக முன்னாள் தூதர் ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். செய்தி சேனல் ஒன்றில் பேசிய ஓய்வுபெற்ற இந்திய தூதர் தீபக் வோஹ்ரா, “ஜி20 உச்சி மாநாட்டுக்கு வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விமானத்தில் கொக்கைன் நிறைந்திருந்தது. அவர் இரண்டு நாட்கள் தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. ஜி20 நிகழ்வுகளை காணவில்லை.” என குற்றம் சாட்டியுள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோவின் விமானத்தில் கொக்கைன் இருந்ததை மோப்ப நாய்கள் கண்டறிந்ததாக கூறிய அவர், ட்ரூடோவின் நடத்தை அவருக்கு வெறி பிடித்து விட்டதை காட்டியது; அவர் தன்னை ஒரு கனடிய ராம்போ போன்று சித்தரிக்க முயன்றதாகவும் கூறியுள்ளார்.
செய்தி சேனல் விவாதத்தின்போது, ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மூளை இருக்கிறதா என்று கேள்வி எழுப்பிய தீபக் வோஹ்ரா, அவர் ஒரு சிறு குழந்தை எனவும், டெல்லி விமான நிலையத்திற்கு வந்தபோது அவர் சிக்கலாக இருந்தததை தனது மனைவி பார்த்ததாகவும் குறிப்பிட்டார்.
முன்னதாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தேசிய தொலைக்காட்சியில் "பிங் பாங் டிங் லிங் டிங் லிங்" என்று குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தீபக் வோஹ்ரா வெளியிட்டார். மேலும், சூடானில் 2007 முதல் 2009 வரை தூதராக இருந்தபோது நிதிக் குழப்பம் தொடர்பான வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) விசாரணைக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
செத்த எலியை வாயில் வைத்து போராடும் தமிழக விவசாயிகள்! காவிரி நீரைத் திறக்குமா கர்நாடகா?
இதுபோன்ற சர்ச்சைக்குரிய வரலாறு இருந்தபோதிலும், சர்வதேச உறவுகள் குறித்து கருத்து தெரிவிக்க தீபக் வோஹ்ராவை செய்தி சேனல்கள் அழைக்கின்றன. கனடாவுடனான இந்தியாவின் உறவுகளைப் பற்றி விவாதிக்க பல்வேறு இந்திய ஊடக சேனல்களில் சமீபத்திய வாரங்களில் அவர் தோன்றி வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.