பிரதமர் மோடி பாதுகாப்புப் படையில் மின்னல் வேகத்தில் ஓடும் முதோல் வேட்டை நாய்; இதன் சிறப்புக்கள் என்னென்ன?
பிரதமர் மோடியின் பாதுப்பாப்புப் படையில் நான்கு மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்ட மின்னல் வேகத்தில் ஓடக் கூடிய முதோல் வேட்டை நாய் சேர்க்கப்பட இருக்கிறது.
பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்க புதிய ரக நாட்டு வேட்டை நாய் பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட உள்ளது. இந்த ரக நாய் நன்றியுடன் இருக்கும் குணாதிசியம் படைத்தது என்று கூறப்படுகிறது. பிரதமருக்கு 24 மணி நேரமும் சிறப்பு பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இந்த பாதுகாப்புப் படையில் ராணுவம், போலீசார் மற்றும் நாய் ஈடுபடுத்தப்பட்டு இருக்கும். தற்போது சிறப்பு அந்தஸ்தாக முதோல் எனப்படும் வேட்டை நாய் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ரக நாய் ஏற்கனவே இந்திய ராணுவப் படை மற்றும் துணை ராணுவப் படையில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் சிறப்பு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் திம்மபூரில் இருக்கும் நாய் ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்திற்கு சென்று இருந்தனர். அப்போது, அங்கு வளர்க்கப்பட்டு வந்த வேட்டை நாய்களில் இரண்டு ஆண் நாய்களை மத்திய பாதுகாப்புப் படையில் சேர்ப்பதற்கு விருப்பம் தெரிவித்து இருந்தனர்.
முதோல் ரக வேட்டை நாயை பாதுகாப்புப் படையினர் அதிகம் விரும்புகின்றனர். இதற்குக் காரணம் இதன் குணாதிசியங்கள்தான். இந்த ரக நாய்கள் 72 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியவை. 20 முதல் 22 கிலோ வரை எடை கொண்டவை. இந்த ரக நாய் சீதோஷண நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும். மிகவும் தைரியமானதும் கூட.
மற்ற நாய்களை விட இந்த ரக நாய்க்கு பார்க்கும் பார்வையும் அகலமானது. 270 டிகிரியில் பார்க்கும் திறன் கொண்டது. மேலும், எஜமானிக்கு விசுவாசமாக இருக்கும். ஒல்லியான தேகம் கொண்டு, நீண்ட கால்களுடன் விரைந்து ஓடும் பலம் படைத்தது. 3 கி. மீட்டர் தொலைவில் இருக்கும் பொருட்களின் வாசனையை எளிதில் மோப்பம் பிடித்து விடும். உடனடியாக அந்த இடத்தைத் தேடி சளைக்காமல், மின்னல் வேகத்தில் ஓடும் திறன் கொண்டது. ஒரு மணி நேரத்திற்கு 50 கி. மீட்டர் தொலைவிற்கு இதனால் ஓட முடியும்.
முதோல் வேட்டை நாய் மூன்று இனங்களில் இருந்து உருவான கலப்பின நாயாக கருதப்படுகிறது. இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் காணப்படும் கிரேஹவுண்ட் இனம், வட ஆப்பிரிக்காவில் காணப்படும் ஸ்லோஃபி இனம் மற்றும் கிழக்கு ஆசியா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியில் காணப்படும் சலுகி இனத்தின் கலப்பினமாக கூறப்படுகிறது.
முதோல் வேட்டை நாய் மராத்தா வேட்டை நாய், பஷ்மி வேட்டை நாய், கத்தேவர் வேட்டை நாய், பெடார், பேரட், சைட் வேட்டை நாய் என்றும் அழைக்கப்படுகிறது. துணிச்சல் மற்றும் வெவ்வேறு சீதோஷண நிலைகளுக்கு ஏற்றது என்பதால், உலகம் முழுவதிலும் இருந்து இந்த ரக நாய்க்கு கிராக்கி அதிகரித்து காணப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க்கில் இருந்துதான் இந்த ரக நாய்களுக்கு தேவை அதிகமாக இருக்கிறது.
முதோல் வேட்டை நாய் கர்நாடகாவில் அமைந்துள்ள முதோல் சமஸ்தானத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. முதோல் சமஸ்தானத்தின் ஆட்சியாளர்கள் இந்த நாய்களை கர்நாடகாவின் பாகல்கோட் என்ற இடத்தில் வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சமஸ்தானத்தின் மன்னர் மலோஜிராவ் கோர்படே இந்த ரக நாயை 1937ஆம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த கிங் ஜார்ஜ் (V) அவர்களுக்கு வழங்கியுள்ளார். அவர்தான் இந்த ரக நாய்க்கு முதோல் என்று பெயரிட்டுள்ளார். அதுவே பிற்காலங்களில் நிலைத்து நின்றுவிட்டது.
ஒரு தேசம்! ஒரே உரம் ! வருகிறது ‘பாரத் பிராண்ட்’: மத்திய அரசு அறிவிப்பு: காங்கிரஸ் விமர்சனம்
சத்ரபதி சிவாஜியும் இந்த ரக நாயை 300 ஆண்டுகளுக்கு முன்பே வளர்த்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இவரது கொரில்லா ராணுவத்தில் இந்த ரக நாய் இடம் பெற்றுள்ளது. இந்த ரக நாய் தனது மகன் சாம்பாஜி மகாராஜின் உயிரை காப்பாற்றியதால், முதோல் ரக நாயை மிகவும் விரும்பி வளர்த்து வந்துள்ளார்.
கடந்த 2018, மே 6 அன்று கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டில், ஜாம்கண்டி என்ற இடத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்த ரக நாயை குறிப்பிட்டு பேசி இருந்தார். ''அவர்களுக்கு (காங்கிரஸ்) தேசம் என்று வந்துவிட்டால் உடல்நலம் பாதித்துவிடும், ஆனால், முதோல் ரக நாயைப் பாருங்கள், தேசத்திற்கானது'' என்று தெரிவித்து இருந்தார்.