இந்திய வங்கிகளுக்கு அதிகரித்து வரும் வராக் கடன்கள் பெரும் பிரச்சனையாக உள்ளன. பொதுத்துறை வங்கிகளில் பெருமளவில் கடன் வாங்கியுள்ள விஜய் மல்லையா, நீரவ் மோடி, மொகுல் சோக்சி போன்றவர்களை மத்திய ஆட்சியாளர்களே வெளிநாட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்துவிட்டனர்.

மறுபுறத்தில் அம்பானி, அதானி குழுமங்கள் உட்பட இந்தியாவின் மிகப்பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார்கள்.

இந்நிலையில் வராக்கடன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஆலோசனைக்கூட்டம் செப்டம்பர் 25ஆம்தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பங்கேற்று, பொதுத் துறை வங்கித்தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.2015 மார்ச் முதல் 2018 மார்ச் வரையில் இந்திய வங்கிகளின் வராக் கடன்கள் ரூ.6.2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக வீரப்ப மொய்லி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

அதேபோல, சிறு, குறு மற்றும் நடுத்தரநிறுவனங்கள் துறைக்கான கடனுதவியை வங்கிகள் சரிவர வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி கடன் வாங்கிவிட்டு நாட்டைவிட்டு ஓடிப் போனதால் நகை மற்றும் ரத்தினங்கள் துறையினருக்கும் கடன் வழங்க வங்கிகள் தயக்கம் காட்டி வருகின்றன.