சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படை வீரர்களின் எண்ணிக்கையை இந்திய அரசு  தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்தியா – சீனா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சிக்கிம் மாநிலத்தில் இந்தியா-பூடான்-சீனா எல்லைகள் சந்திக்கும் இடமான டோகாலாம் பகுதியில் இந்திய ராணுவம் அமைத்த இரண்டு பதுங்கு குழிகளை சீன ராணுவத்தினர், கடந்த மாதம் 1 ஆம் தேதி அழித்தனர்.

மேலும் சீனா ராணுவம் அத்துமீறி சாலை அமைத்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக அந்த பகுதியில் இந்திய ராணுவத்தினர் கூடுதலாக குவிக்கப்பட்டனர்.

டோகாலாம் பகுதியில் இருந்து இந்திய படைகளை திரும்பப் பெறுமாறு சீன ராணுவம் கூறியதை, இந்திய ராணுவம் ஏற்கவில்லை. இதனால் சீனா ஆத்திரம் அடைந்தது.இதுபோல் கடந்த ஒரு மாத காலமாக இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே சிக்கிம் மாநில பகுதியில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. 

இந்நிலையில், சீன எல்லையை ஒட்டியுள்ள சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் எல்லை பகுதிகளில் இந்தியா தனது படைவீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

இதே போல் சீன ராணுவமும் எல்லைப்பகுதியில் தனது படைகளை குவித்து வருவதால் இரு நாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.