சீன ராணுவம் கடந்த 15ம் தேதி இந்திய எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவத்தின் மீது அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்தியா தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில், சீன தரப்பிலும் ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியானாலும், சீனா சார்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. 

சீனாவின் இந்த அத்துமீறல், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசலையும், எல்லையில் பதற்றத்தையும் அதிகரித்தது. இந்த தாக்குதலையடுத்து, இருதரப்பு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையின்போது, சீனா அத்துமீறியதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். 

இந்தியா - சீனா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துமீறி தாக்குதல் நடத்திய சீனா, அதன்பின்னர் பம்மியது. இந்தியாவுடனான மோதலை விரும்பவில்லை என சீனா தெரிவித்தது. சீனா பம்மிய அதேவேளையில், இந்தியாவின் குரல் வலுத்து ஒலித்தது. இந்தியா அமைதியை விரும்பும் நாடு தான். ஆனாலும், இந்தியா அதன் இறையாண்மையையும் ஒற்றுமையையும் காப்பதற்காக, எதையும் செய்யும் என்று கெத்தான தொனியில் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. 

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சீனா அவ்வப்போது சீண்டுவதும், தாக்குதல் நடத்துவதுமாக இருக்கும் நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா மீறுவதில்லை. சீனாவின் இந்த தாக்குதலையடுத்து, சம்பவம் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட சீன எல்லை பகுதிகளில் கூடுதலாக ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை குவித்துள்ளது இந்தியா. 

இந்நிலையில், சீனா விவகாரம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில், பிபின் ராவத் மற்றும் முப்படைகளின் தளபதிகளும் கலந்துகொண்டனர். 

அந்த ஆலோனைக்கூட்டத்தில், சீனாவுடனான விவகாரம் குறித்தும், எல்லையில் பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொண்ட ராணுவ உயரதிகாரி ஒருவர், இனிமேல் சீனாவுடனான இந்தியாவின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும். களத்தில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது. களச்சூழலுக்கு ஏற்ப அவர்களே இனி முடிவு எடுக்கலாம் என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். 

இனிமேல் சீனா எல்லையில் அத்துமீறினால், ராணுவ உயரதிகாரிகள் அல்லது அரசாங்கத்தின் உத்தரவுக்காக எல்லாம் ராணுவ வீரர்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. களத்தில் இருக்கும் ராணுவ வீரர்களே சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கலாம். சீனா தாக்குதல் நடத்தினால் எதைப்பற்றியும் யோசிக்காமல் உடனே இந்திய ராணுவம் பதிலடி கொடுக்கலாம்.