புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனின் வீரதீர செயலை பாராட்டி வீர் சக்ரா விருது வழங்க இந்திய விமானப்படை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
புல்வாமாவில் கடந்த பிப்ரவரியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் பதிலடி தரும்விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. அதனையடுத்து பாகிஸ்தான் விமானங்கள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் ஊருருவி தாக்குதல் நடத்த முயற்சி செய்தன.
அப்போது, அந்த விமானங்களை இந்திய விமான படையினர் சுட்டு வீழ்த்த துரத்தினர். அப்போது இந்திய விமான படையைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார். ஆனால், அடுத்த 75 மணி நேரத்தில் அபிநந்தனை பாகிஸ்தான் அரசு விடுவித்தது. இந்தியா திரும்பிய அபிநந்தன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதற்கிடையே ஸ்ரீநகர் விமானப்படை பிரிவிலிருந்து, மேற்கு பிராந்திய விமானப்படை பிரிவு அதிகாரியாக அபிநந்தன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 
இந்தத் தகவல் வெளியான அடுத்த சில மணி நேரத்தில் வீரதீர செயலை பாராட்டி வழங்கப்படும் வீர் சக்ரா விருதை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வழங்க இந்திய விமானப்படை பரிந்துரை செய்தது.