அகதிகளுக்கான ஐநா ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது: ரவிக்குமார் எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு பதில்!
அகதிகளுக்கான ஐநா ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது என ரவிக்குமார் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது
நாடாளுமன்ற மக்களவையில், “ஜி 20 நாடுகளின் பாலி மாநாட்டுத் தீர்மானம், சர்வதேச சட்டங்களையும், பலதரப்பு அமைப்பையும் மதிக்க வேண்டியது உலகில் அமைதியையும், நிலையான ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு அவசியம் என வலியுறுத்தியது. அதுகுறித்த இந்திய அரசின் நிலைபாடு என்ன?; அகதிகளுக்கான ஐநா ஒப்பந்தத்திலும், நெறிமுறையிலும் இந்தியா கையெழுத்திடுமா? இல்லாவிட்டால் அதற்கான காரணம் என்ன?” ஆகிய கேள்விகளை விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், அகதிகளுக்கான ஐநா ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் முரளிதரன் அளித்துள்ள பதிலில், “ஜி 20 நாடுகளின் பாலி மாநாட்டு ஒப்பந்தமானது கருத்தொற்றுமையின் அடிப்படையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது.
அகதிகளுக்கான 1951 ஆம் ஆண்டு ஐநா ஒப்பந்தமோ, 1967 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட நெறிமுறைகளோ வளரும் நாடுகளில் அகதிகள் அதிக எண்ணிக்கையில் நுழைவதால் ஏற்படும் பிரச்சனைகளைக் கணக்கில் கொள்ளவில்லை. எனவே அவற்றில் கையெழுத்திடும் எண்ணம் இந்திய அரசுக்கு இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 19இல் டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின்!
இதுகுறித்து ரவிக்குமார் எம்.பி. கூறுகையில், “அமைச்சரின் இந்தப் பதில் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள லட்சக் கணக்கான அகதிகளுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஐநா சபை 1951ஆம் ஆண்டில் இயற்றிய அகதிகளுக்கான ஒப்பந்தத்தில் 140 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா அதில் கையெழுத்திடாதது மட்டுமின்றி அகதிகளுக்கென சட்டம் எதையும் இதுவரை இயற்றவுமில்லை.
UNHCR இன் கணக்குப் படி, 2011இல் இந்தியாவில் 204,600 அகதிகள் இருந்தனர். அவர்களில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13,200 பேரும், மியான்மரில் இருந்து வந்தவர்கள் 16,300 பேரும், திபெத்திலிருந்து வந்தவர்கள் ஒரு லட்சம் பேரும், 73,000 இலங்கைத் தமிழர்களும் அடங்குவர்.” என தெரிவித்துள்ளார்.