பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் தூதரகத்திற்கு அளிக்கப்படும் பாதுகாப்பை இந்தியா வாபஸ் பெற்றுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டு, சார்க் விசா விலக்கு திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள ராணுவ ஆலோசகர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு அளிக்கப்படும் பாதுகாப்பை வாபஸ் பெறுவதாக இந்தியா அறிவித்துள்ளது. பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்த வெளியுறவுத்துறை இது குறித்த அறிக்கையை அவரிடம் அளித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான உறவில் பல கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. 1960ஆம் ஆண்டின்சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. அட்டாரியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் மூடப்பட்டுள்ளன. எக்ஸ் தளத்தில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரபூர்வ பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதல்: ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

பாகிஸ்தானியர்களுக்கு விசா ரத்து:

புதன்கிழமை இரவு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்கு பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறினார். கடந்த காலத்தில் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட SVES விசாக்களும் ரத்து செய்யப்படுகிறது என்றும் அவர் கூறினார். தற்போது SVES விசாவின் கீழ் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற 48 மணிநேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற ஒரு வாரம் அவகாசம் உள்ளது என்றும் வெளியுறவுச் செயலாளர் தெரிவித்தார். இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இருந்து இந்தியா தனது பாதுகாப்பு, கடற்படை, விமான ஆலோசகர்களை திரும்பப் பெறவதாகவும் அந்தத் தூரகத்தில் உள்ள இந்தப் பதவிகள் ரத்து செய்யப்படுவதாகவும் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

திரும்பப் பெறப்படும் தூதரக அதிகாரிகள்:

பாகிஸ்தானில் உள்ள தூதரகங்களில் பணிபுரியும் ஐந்து அதிகாரிகள் திரும்பப் பெறப்படுவார்கள். எனவும் வரும் மே 1ஆம் தேதிக்குள் பாகிஸ்தான் தூதரகங்களில் உள்ள இந்திய அதிகாரிகளின் எண்ணிக்கை 55 இலிருந்து 30 ஆகக் குறைக்கப்படும் என்றும் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

இதனிடையே, பாகிஸ்தான் கராச்சி கடற்கரையில் ஏவுகணை சோதனை நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, பிரதமர் தலைமையில் நடந்த பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை அடுத்து, அனைத்துப் படைகளும் உயர் விழிப்புடன் இருக்குமாறு உத்தரவிட்டது.

பஹல்காமில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடிய நிஜ ஹீரோ!