உலகப் பொருளாதார சக்தியாகும் இந்தியா: பிரதமர் மோடி நம்பிக்கை!
உலகப் பொருளாதார சக்தியாக இந்தியா விரைவில் உருவாகும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்
இந்தியாவை உலகளாவிய வளர்ச்சி இயந்திரமாக மாற்றுவதே தங்களது நோக்கம் என்றும், விரைவில் உலகின் பொருளாதார சக்தியாக இந்தியா உருவாகும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தின் அறிவியல் நகரத்தில் நடைபெறும் துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டின் 20 ஆண்டுகளைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 20 ஆண்டுகளுக்கு முன்பு துடிப்பான குஜராத் என்ற சிறிய விதைகளை விதைத்தோம்; அது இன்று மரமாக வளர்ந்து நிற்கிறது என்றார்.
இந்தியா விரைவில் உலகப் பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்று கூறிய பிரதமர் மோடி, இன்னும் சில ஆண்டுகளில், உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்று உத்தரவாதம் அளித்தார்.
துடிப்பான குஜராத் உச்சி மாநாடு, எளிமையாக தொடங்கி பெரியளவில் உருமாறியதையும், இதனை பின்பற்றி பல மாநிலங்கள் தங்கள் சொந்த முதலீட்டு உச்சிமாநாடுகளை நடத்தியதையும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.
ஒவ்வொரு வேலையும் மூன்று நிலைகளைக் கடந்து செல்கிறது - முதலில் கேலி செய்யப்படுகிறது, பின்னர் அது எதிர்ப்பை எதிர்கொள்கிறது, இறுதியாக அது ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்று சுவாமி விவேகானந்தர் கூறியதாக தெரிவித்த பிரதமர் மோடி, துடிப்பான குஜராத்தின் வெற்றியையும், பல்வேறு நிலைகளை அது கடந்த விதத்தையும் பற்றி விவரித்தார்.
https://tamil.asianetnews.com/tamilnadu/chief-minister-stalin-instructed-that-the-government-employees-should-address-the-grievances-of-the-public-that-come-with-the-petitions-kak-s1mvxv
முந்தைய மத்திய அரசு மாநிலத்தின் தொழில்துறை முன்னேற்றத்தில் அலட்சியமாக இருந்த சமயத்தில், துடிப்பான குஜராத் வெற்றி பெற்றது என்றும் பிரதமர் கூறினார். உச்சி மாநாட்டிற்கு இடையே, மாநாட்டு மையத்தில் அமைக்கப்பட்டிருந்த ரோபாட்டிக்ஸ் கேலரியை பிரதமர் மோடி பார்வையிட்டார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “எதிர்காலத்தின் முடிவற்ற சாத்தியங்களை ரோபாட்டிக்ஸ் மூலம் சாத்தியமாக்கலாம்.” என்று பதிவிட்டுள்ளார். ரோபாட் மூலம் பரிமாறப்பட்ட தேநீரையும் பிரதமர் மோடி அப்போது ருசித்தார்.
துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சிமாநாடு அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியால், 20 ஆண்டுகளுக்கு முன்பு, 2003ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. காலப்போக்கில், அது ஒரு உலகளாவிய நிகழ்வாக உருமாறி, இந்தியாவின் மிக முதன்மையான வணிக உச்சிமாநாடுகளில் ஒன்று என்ற அந்தஸ்தையும் பெற்றது. கடந்த 20 ஆண்டுகளில், துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சிமாநாடு "குஜராத்தை விருப்பமான முதலீட்டு இடமாக மாற்றுவது" என்பதில் இருந்து "ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவது" வரை பரிணமித்துள்ளது.