இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,909 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. 

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,98,706லிருந்து 2,07,615 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8909 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 217 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5815 ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை 1,00,303 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 4776 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,01,497 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 72,300 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 31,333 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,465 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 24,586 பேருக்கும், டெல்லியில் 22,132 பேருக்கும், குஜராத்தில் 17,617 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் பாதிப்பில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.