பாகிஸ்தானிலிருந்து வரும் அனைத்து வகையான அஞ்சல்கள் மற்றும் பார்சல்களையும் விமானம் மற்றும் தரை வழிகள் மூலம் பரிமாற்றம் செய்வதை இந்தியா நிறுத்தியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில், பாகிஸ்தானிலிருந்து வரும் அனைத்து வகையான அஞ்சல்கள் மற்றும் பார்சல்களையும் இந்தியா தடை செய்துள்ளது. விமானம் மற்றும் தரை வழிகள் மூலம் பரிமாற்றம் செய்வதை இந்திய அரசு நிறுத்தியுள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் எல்லை தாண்டிய ஊடுருவல்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை அஞ்சல் சேவைகளுக்கு அப்பாற்பட்டது. வர்த்தக நடவடிக்கையாக, பாகிஸ்தானில் உற்பத்தியாகும் அல்லது அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வதையும், பரிமாறிக்கொள்வதையும் வர்த்தக அமைச்சகம் உடனடியாக தடை செய்துள்ளது. 2023 வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் (FTP) திருத்தம் செய்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. “இந்த விதிமுறை அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்” என்று மே 2 தேதியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிக்கை தெரிவிக்கிறது.
பாகிஸ்தான் கொடியை ஏற்றிய அனைத்து வணிகக் கப்பல்களும் இந்திய துறைமுகங்களுக்குள் நுழைவதை இந்தியா தடை செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள மோசமான நிலையைப் பிரதிபலிக்கிறது.
அஞ்சல் சேவைகள் தடை ஏன்?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் மாதம் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுக்களுக்குத் தொடர்பு இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல பதிலடிகளை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற குழுக்கள் பாகிஸ்தான் மண்ணிலிருந்து தொடர்ந்து செயல்பட்டு வருவதற்கு எதிராக பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு இந்தியா கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுக்க பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கும் வரை, பாகிஸ்தானுடனான எந்தவொரு தொடர்பையும் கிடையாது என்ற நிலைப்பாட்டுக்கு இந்தியா வந்திருக்கிறது. இதன் விளைவாக, அஞ்சல், வர்த்தகம் மற்றும் கடல்சார் தொடர்புகளுக்கான கட்டுப்பாடுகள் காலவரையின்றி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருநாடுகளுக்கு இடையேயான தொடர்பு கிட்டத்தட்ட முடங்கி, பரஸ்பர நம்பிக்கை எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. இந்நிலையில், பதற்றத்தைக் குறைப்பதற்கான வழி வெகு தொலைவில் உள்ளது. இப்போதைக்கு, பாகிஸ்தானுக்கு இந்தியா கூறும் செய்தி தெளிவாக உள்ளது. இனி வழக்கம்போல வணிகத் தொடர்பு இல்லை.


