அருணாச்சலப்பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: இந்தியா மீண்டும் திட்டவட்டம்!
இந்திய பகுதிகளை பெயர் மாற்றம் செய்யும் சீனாவின் முயற்சி அர்த்தமற்றது என மத்திய அரசு தெரிவித்துள்ளது
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று உரிமை கொண்டாடும் சீனா, அம்மாநிலத்துக்கு ஜங்னான் என்றும் பெயர் சூட்டி அழைத்து வருகிறது. ஆனால், அருணாச்சலப்பிரதேச மாநிலம் இந்தியாவினுடைய பகுதி என இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
இந்த நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தின் மீதான தனது உரிமையை நிலைநாட்டும் முயற்சியாக அம்மாநிலத்தில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள மேலும் 30 இடங்களின் பெயர்களை தங்களது மொழியில் சீனா மாற்றியுள்ளது. ஏற்கனவே இதுபோன்று 3 பட்டியல் வெளியான நிலையில், நிர்வாகப் பிரிவுகளை நிறுவுவதற்கும் பெயரிடுவதற்கும் பொறுப்பான சீன சிவில் விவகார அமைச்சகம் தற்போது 4ஆவது பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அதன்படி, 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், நான்கு ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு துண்டு நிலம் என மொத்தம் 30 இடங்களுக்கு சீனா மறுபெயரிட்டுள்ளது. அந்த பெயர்களின் சீன, திபெத்திய, பின்யின், மாண்டரின் சீன மொழியின் ரோமானிய எழுத்துக்கள் உள்ளன.
கச்சத்தீவு விவகாரத்தை தேர்தலுக்காக கையில் எடுக்கிறதா பாஜக? நிர்மலா சீதாராமன் விளக்கம்!
முன்னதாக, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஆறு இடங்களின் பெயர்களை மாற்றி தரப்படுத்தப்பட்ட பெயர்கள் என்று அழைக்கப்படும் முதல் பட்டியலை கடந்த 2017 ஆம் ஆண்டில் சீனா வெளியிட்டது. 2021ஆம் ஆண்டில் 15 இடங்களை கொண்ட இரண்டாவது பட்டியலையும், 2023ஆம் ஆண்டில் 11 இடங்களுக்கான பெயர்களைக் கொண்ட மூன்றாவது பட்டியலையும் சீனா வெளியிட்ட நிலையில், தற்போது 4ஆவது பட்டியலை சீனா வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்திய பகுதிகளை பெயர் மாற்றம் செய்யும் சீனாவின் முயற்சி அர்த்தமற்றது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர், “இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயர்களை பெயர் மாற்றம் செய்ய சீனா முயற்சிப்பது அர்த்தமற்றது. அத்தகைய முயற்சிகளை நாங்கள் உறுதியாக நிராகரிக்கிறோம். அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும்.” என விளக்கம் அளித்துள்ளார்.