இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, ஆக்சியம்-4 (Ax-04) திட்டத்தின் கீழ் ஜூன் 19, 2025 அன்று விண்வெளிக்குச் செல்கிறார். ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்தப் பயணம் தொடங்கும்.

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் Ax-4 விண்வெளிப் பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இஸ்ரோ புதிய ஏவுதல் தேதியை அறிவித்துள்ளது.

சுபான்ஷு சுக்லா தனது முதல் விண்வெளிப் பயணத்தை ஆக்சியம்-4 (Axiom-4) திட்டத்தின் கீழ் ஜூன் 19, 2025 அன்று மேற்கொள்ளவுள்ளார். இந்த மிஷன் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

இஸ்ரோ (ISRO), ஆக்சியம் ஸ்பேஸ் (Axiom Space) மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற முக்கிய ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குப் பிறகு ஏவுகணை தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், ஃபால்கன் 9 ஏவுதல் வாகனத்தில் முன்பு கண்டறியப்பட்ட திரவ ஆக்சிஜன் கசிவு போன்ற தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தினர். ஸ்பேஸ்எக்ஸ் பொறியாளர்கள் இந்த சிக்கலை தீர்த்துவிட்டதால், ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதற்குத் தயாராக உள்ளது.

சுபான்ஷு சுக்லாவின் பயணம்:

இந்திய விமானப்படை பைலட் மற்றும் இஸ்ரோவின் புதிய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா, Ax-04 திட்டத்தில் சர்வதேச குழுவினருடன் இணைவார். இது இந்தியாவின் மனித விண்வெளிப் பயண திட்டத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

இதற்கிடையில், ஆக்சியம் ஸ்பேஸ், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள Zvezda சேவை தொகுதியில் கண்டறியப்பட்ட ஒரு தனி அழுத்தக் கோளாறை நாசா நெருக்கமாக கண்காணித்து வருகிறது. இந்த கோளாறு Ax-04 ஏவுதலுடன் தொடர்பில்லாவிட்டாலும், சர்வதேச விண்வெளி திட்டங்களுக்குத் தேவையான ஒருங்கிணைப்புக்கு இது முக்கியமானதாகும்.

வீரர்களின் பாதுகாப்பும் விண்வெளி சோதனைகளும்:

விண்வெளிக்குச் செல்லும் குழுவினரின் பாதுகாப்பு மற்றும் திட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக ஆக்சியம் ஸ்பேஸ் உறுதியளித்துள்ளது.

Ax-04 திட்டம், குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு வணிக அணுகலை விரிவுபடுத்துவதற்கும், இறுதியில் உலகின் முதல் வணிக விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கும் ஆக்சியம் ஸ்பேஸின் பரந்த இலக்கின் ஒரு பகுதியாகும். இந்தியாவுக்கு, சுக்லாவின் பங்கேற்பு ஒரு பெருமைக்குரிய தருணம். இது புதிய தலைமுறை விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி ஆர்வலர்களை ஊக்குவிக்கும்.

அவர் இந்தியா வடிவமைத்த 7 சோதனைகளை மேற்கொள்வார், மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நாசாவுடன் பிற கூட்டு ஆய்வுகளிலும் பங்கேற்பார்.