இந்தியாவின் முதல் ‘ஜென் பீட்டா’ குழந்தை பிறந்தது; எந்த மாநிலத்தில்? ஜென் பீட்டா என்றால் என்ன?
இந்தியாவின் முதல் ஜென் பீட்டா குழந்தை பிறந்தது. இந்த குழந்தை எந்த மாநிலத்தில் பிறந்தது? ஜென் பீட்டா என்றால் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
ஜென் பீட்டா குழந்தை
இந்தியாவின் முதல் 'ஜென் பீட்டா' தலைமுறை குழந்தை ஜனவரி 1ம் தேதி அன்று மிசோரம் மாநிலத்தில் பிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிசோரமின் ஐஸ்வாலில் உள்ள டர்ட்லாங்க்ஸ் சினோட் மருத்துவமனையில் ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை 12:03 மணிக்கு இந்த ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு அவரது பெற்றோர் பிரான்கி ரெம்ருதிகா ஜாடெங் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இது ஜென் பீட்டா தலைமுறையின் முதல் குழந்தை ஆகும். குழந்தை பிறந்தபோது 3.12 கிலோ எடையுடன் இருந்தது. இப்போது அந்த குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், எந்த பிரச்சனையும் இல்லை என்றும் டர்ட்லாங்க்ஸ் சினோட் மருத்துவமனையின் செவிலியர் லால்சுஅனாவ்மி தெரிவித்துள்ளனர். குழந்தை பிரான்கி ரெம்ருதிகா ஜாடெங்கின் தாய் ராம்சிர்மாவி. தந்தையின் பெயர் ரெம்ருத்சங்கா. ரெம்ருத்சங்கா ராம்சிர்மாவி தம்பதியினருக்கு ஏற்கெனவே பிரான்கி என்ற பெண் குழந்தை உள்ளது.
ஜென் பீட்டா என்றால் என்ன?
இவர்கள் ஐஸ்வால் கட்லா கிழக்கு பகுதியில் வசித்து வருகின்றனர். இப்போது பிரான்கி ரெம்ருதிகா ஜாடெங்கும் அவர்களின் குடும்பத்தில் ஒருவராகி விட்டார். அது என்ன ஜென் பீட்டா தலைமுறை? என்று உங்களுக்கு கண்டிப்பாக சந்தேகம் எழுந்திருக்கும். உலகம் முழுவதும் கலாச்சார, சமூக, வரலாற்று அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பிறப்பவர்கள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.
அதாவது மில்லியனர்ஸ், ஜென் Z, ஜென் ஆல்பா என்ற பெயர்களில் அழைக்கப்பட்டனர். 1901ம் ஆண்டில் இருந்து பெயர் வைக்கும் நிலை இருந்து வரும் நிலையில், 1981ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் மில்லினியல்கள் என்று அழைக்கப்பட்டனர். 1997ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் ஜென் Z தலைமுறை என்று அழைக்கப்படுகின்றனர்.
ஜென் ஆல்பா, ஜென் Z
கடந்த 2010 முதல் 2024 வரை பிறந்த குழந்தைகள் 'ஜென் ஆல்பா' என அழைக்கப்பட்டனர். இந்நிலையில், 2025 ஜனவரி 1ம் தேதி அதிகாலை 12 மணிக்கு பிறகு பிறக்கும் அனைத்து குழந்தைகளும் 'ஜென் பீட்டா' தலைமுறை என்று அழைக்கப்படுவார்கள். வரும் 2039ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் 'ஜென் பீட்டா' தலைமுறை பட்டியலில் தான் வருவார்கள்.
200 கோடி பேருடன் 'ஜென் ஆல்பா' தலைமுறையினர் டிஜிட்டல், தொழில்நுட்பத்தை அதிகம் சார்ந்து வளர்ந்தனர். இப்போது 'ஜென் ஆல்பா' தலைமுறை முடிந்து 'ஜென் பீட்டா' தலைமுறை தொடங்கியுள்ளது. 'ஜென் பீட்டா' என்ற சொல்லை ஃபியூச்சரிஸ்ட் மார்க் மெக்ரிண்டில் என்பவர் உருவாக்கினார், 2035ம் ஆண்டில் 'ஜென் பீட்டா' தலைமுறையினர் உலக மக்கள் தொகையில் 16 சதவீதமாக இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
ஜென் பீட்டா தலைமுறையினர் எப்படி இருப்பார்கள்?
இந்த ஜென் பீட்டா தலைமுறையினர் தடையற்ற டிஜிட்டல் மற்றும் இயற்பியல் உலகத்தை கொண்டிருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. கல்வி முதல் பணியிடங்கள் வரை மற்றும் சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு வரை என அனைத்திலும் உட்புகுந்த AI (செயற்கை நுண்ணறிவு) மற்றும் ஆட்டோமேஷன் கால உலகத்தை ஜென் பீட்டா தலைமுறையினர் கொண்டிருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.