கொரோனாவுக்கென்று பிரத்யேகமாக சிகிச்சை அளிப்பதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் மும்பையில் புதிய மருத்துவமனையை கட்டி அரசிடம் ஒப்படைத்துள்ளது. 

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான ரிலையன்ஸும் இணைந்துள்ளது.

இதுதொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மும்பை மாநகராட்சியுடன் இணைந்து ரிலையன்ஸ் பவுண்டேஷன் நிறுவனம் இரண்டு வார காலத்துக்குள் புதிய மருத்துவமனையைக் கட்டி முடித்துள்ளது. இந்த மருத்துவமனையில் கொரோனா பாதித்த 100 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும். இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனம் அளிக்கும் நிதியில் கட்டிய முதல் மருத்துவமனை இது. இந்த மருத்துவமனை தரமான கட்டுமானத்துடன் கட்டப்பட்டுள்ளது.

வென்டிலேட்டர், பேஸ்மேக்கம், டையாலிஸிஸ் உள்ளிட்ட உபகரணங்கள் உள்ளன. கொரோனா பாதித்த நாடுகளிலிருந்து இந்தியா திரும்புவர்களை தனிமைப்படுத்துவதற்கான சிறப்பு மருத்துவ வசதிகளையும் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, மகாராஷ்டிரா மாநிலம் லோதிவலி பகுதியில் முழுவதுமாக தனிமைப்படுத்துவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை ஏற்பாடு செய்கிறது. அந்த முகாம், மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்.

எங்களுடைய மருத்துவர்களும், ஆராச்சியாளர்களும் கூடுதல் நேரம் எடுத்து கொரோனாவைக் குணப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய முயற்சித்துவருகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் முகக் கவசம் உற்பத்தி செய்யவுள்ளோம். கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்காக அவசரச் சேவை செய்யும் வாகனங்களுக்கு இலவச எரிபொருள்களை வழங்குவோம்’’ எனத் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிப்பால் வாழ்வாதரத்தை இழந்தவர்களுக்கு ரிலையன்ஸ் நிர்வாகம் சார்பில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும்.

வேலை தடைபட்டாலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்த மற்றும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கு அவர்களுடைய ஊதியம் வழங்கப்படும். ரிலையன்ஸ் நிறுவனத்தில் 30,000-க்கு குறைவான ஊதியம் கொண்டவர்களுக்கு அவர்களிடம் பணப் புழக்கத்தை அதிகரிக்க மாதத்தில் இரண்டு முறையாக அவர்களுக்கான ஊதியம் வழங்கப்படும். மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கும் வகையில் நாடு முழுவதுமுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் 736 பல்பொருள் அங்காடி காலை 7 மணி முதல் 11 மணி வரை செயல்படும். ஊழியர்கள் உரிய பாதுகாப்புடன் பணி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.