இந்தியா வரும் ஆண்டுகளில் உலகின் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்து இருப்பதாக போபாலில் இன்று துவங்கிய மத்திய பிரதேச உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

போபால்: மத்திய பிரதேச உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று தொடங்கி வைத்தார். மாநில அரசின் சாதனைகளை பாராட்டிய அவர், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டின் முதல் ஐந்து மாநிலங்களில் ஒன்றாக மத்திய பிரதேசம் இடம் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டார். மேலும், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் மத்திய பிரதேசம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் "வேகமாக" வளர்ந்து வரும் பொருளாதாரம் குறித்து உலக நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கையான பார்வையை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். மேலும், இது மற்ற மாநிலங்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

"இந்தியாவின் வரலாற்றில் இதுவே முதல் முறை. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை மிகவும் நம்பிக்கையுடன் பார்க்கிறது. சில நாட்களுக்கு முன்பு, உலக வங்கி, இந்தியா வரும் ஆண்டுகளில் உலகின் அதிவேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கும் என்று கூறியது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD) பிரதிநிதி ஒருவர், உலகின் எதிர்காலம் இந்தியாவில் உள்ளது என்றார். இதுபோன்ற உதாரணங்கள் இந்தியாவின் மீது உலகிற்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுகின்றன. இந்த நம்பிக்கை ஒவ்வொரு மாநிலத்தின் மன உறுதியையும் அதிகரிக்கிறது. இன்று இதை மத்திய பிரதேசத்தின் உலக முதலீட்டு மாநாட்டில் நம்மால் காண முடிகிறது," என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்த மாநிலத்தில் ரூ.1.1 லட்சம் கோடி முதலீடு செய்த அதானி; 1.2 லட்சம் வேலைகள் - எங்கு தெரியுமா?

"மக்கள் தொகையில் இந்தியாவின் ஐந்தாவது பெரிய மாநிலமாக மத்திய பிரதேசம் இருக்கிறது. விவசாயத்தைப் பொறுத்தவரை, இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் ஒன்றாகும். கனிம வளங்களைப் பொறுத்தவரை, மத்திய பிரதேசம் நாட்டின் முதல் ஐந்து மாநிலங்களில் உள்ளது. இந்த மாநிலத்திற்கு நாட்டின் முதல் 5 மொத்த உள்நாட்டு உற்பத்தி மாநிலங்களில் ஒன்றாக மாறுவதற்கு அனைத்து திறன்களும் உள்ளன. கடந்த இருபது ஆண்டுகளில், மத்திய பிரதேசம் மாற்றத்தை கண்டு வருகிறது. இன்று மத்திய பிரதேசம் முதலீட்டிற்கான சிறந்த மாநிலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் EV புரட்சியில் மத்திய பிரதேசம் ஒரு முன்னணி மாநிலமாக மாறியுள்ளது என்று பிரதமர் கூறினார்.

தொடர்ந்து பிரதமர் பேசுகையில், ''ஜனவரி 2025 வரை மத்திய பிரதேசத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கிட்டத்தட்ட 90 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது. உற்பத்திக்கான அற்புதமான மையமாக மத்தியப்பிரதேசம் மாறி வருகிறது என்பதைக் குறிக்கிறது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள உள்கட்டமைப்பு வளர்ச்சியால் மத்திய பிரதேசம் பயனடைந்துள்ளதாகவும், டெல்லியிலிருந்து மும்பைக்கு சிறந்த இணைப்பு இருப்பதால், மாநிலம் மும்பை துறைமுகங்களுக்கும், வட இந்தியாவின் சந்தைகளுக்கும் எளிதில் செல்லக்கூடியதாக உள்ளது.

"மத்திய பிரதேசத்தில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான கிலோமீட்டர் சாலை உள்ளது. மத்திய பிரதேசத்தின் தொழில்துறை வழித்தடங்கள் நவீன விரைவுச் சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தளவாடத் துறையின் வளர்ச்சி உறுதியாகிறது. மாநிலத்தின் ரயில்வே போக்குவரத்து நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. ரயில் போக்குவரத்து 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. போபாலின் ராணி கமலாபதி ரயில் நிலையத்தின் படங்கள் யார் மனதையும் வெல்லும். இதன் அடிப்படையில் அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தின் 80 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. 

ஜப்பானை தமிழ்நாட்டில் இறக்கிய அமைச்சர் டிஆர்பி ராஜா.. இந்தியாவே வியந்து பார்க்குது.!!

"கடந்த பத்தாண்டுகளில், இந்தியா பசுமை எரிசக்தி துறையில் முன்னோடியில்லாத வளர்ச்சியை கண்டது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கிட்டத்தட்ட 70 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேசத்தில் 31, 000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் உள்ளது. அதில் 30 சதவீதம் சூரிய சக்தியாகும். சில நாட்களுக்கு முன்பு ஓம்காலேஸ்வரில் மிதக்கும் சூரிய மின் நிலையம் தொடங்கப்பட்டது," என்று பிரதமர் மோடி கூறினார்.

மத்திய பிரதேசத்தில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய 60 நாடுகளைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கு மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த மாநாட்டில் 13 தூதர்கள், ஆறு உயர் ஆணையர்கள் மற்றும் முக்கிய நாடுகளைச் சேர்ந்த பல துணைத் தூதர்கள் பங்கேற்க உள்ளனர்.