மேற்குவங்கத்தில் வக்ஃப் மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் சிறுபான்மை முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு வங்கதேசம் உத்தரவாதம் கோரியதை இந்தியா நிராகரித்துள்ளது. டாக்காவில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதுடன் இணைத்துக் காட்டப்படும் மறைமுக முயற்சி என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

India rejects Bangladesh on West Bengal violence: திருத்தப்பட்ட வக்ஃப் மசோதாவிற்கு எதிரான வன்முறை போராட்டங்களைத் தொடர்ந்து, மேற்குவங்கத்தில் சிறுபான்மை முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கு வங்கதேசம் உத்தரவாதம் கோரி இருந்தது. இதை மத்திய அரசு நிராகரித்துள்ளது. 

வக்ஃப் மசோதாவுக்கு எதிராக மேற்குவங்கத்தில் வன்முறை:
திருத்தப்பட்ட வக்ஃப் மசோதாவிற்கு எதிராக மேற்குவங்க மாநிலத்தில் கடுமையான போராட்டங்கள் நடந்து வருகிறது. இது அந்த மாநிலத்தின் சகஜ நிலையை முற்றிலும் பாதித்துள்ளது. இந்த நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் இருக்கும் சிறுபான்மை முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று வங்கதேசம் கோரிக்கை விடுத்து இருந்தது. வங்கதேசத்தின் இந்தக் கோரிக்கையை இந்தியா வெள்ளிக்கிழமை கடுமையாக நிராகரித்தது. இது டாக்காவில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதுடன் இணைத்து காட்டப்படும் மறைமுக முயற்சி என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

வங்கதேசத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை:
"மேற்குவங்கத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக வங்கதேசம் தரப்பில் கூறப்பட்ட கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கிறோம்" என்று வெளியுறவு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், ''வங்கதேசத்தில் சிறுபான்மையினர் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர். இதுகுறித்து இந்தியா தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது. இதற்கு இணையாக மேற்குவங்கத்தில் நடைபெறும் செயல்களுடன் ஒப்பிடுகின்றனர். வங்கதேசத்தின் உண்மைகளை மறைப்பதற்கான செயல் இது. அங்கு இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தொடர்ந்து சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். வங்கதேசம் அவர்களது சொந்த நாட்டில் இருக்கும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவது நல்லது'' என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமியர்களுடன் துணை நிற்பேன்! வக்ஃபு சட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விஜய் வரவேற்பு!

முர்ஷிதாபாத் வன்முறை:
மேற்குவங்கத்தில் வக்ஃப் (திருத்தம்) சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தெற்கு 24 பர்கானாஸில் உள்ள முர்ஷிதாபாத் மற்றும் பங்கர் போன்ற பகுதிகளில் வன்முறையாக வெடித்தது. போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினருடன் மோதினர். போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

மேற்குவங்க வன்முறை குறித்து வங்கதேசம்
மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் நடந்த வகுப்புவாத வன்முறையை வங்கதேசத்தின் இடைக்கால தலைவர் முகமது யூசுப் அரசாங்கம் எதிர்த்தது. மேலும் அங்குள்ள சிறுபான்மை முஸ்லிம் மக்களைப் பாதுகாக்க அண்டை நாடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. ''முர்ஷிதாபாத்தில் நடந்த வகுப்புவாத வன்முறையில் வங்காளதேசத்தை ஈடுபடுத்தும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் கடுமையாக மறுக்கிறோம்,'' என்று தலைமை ஆலோசகரின் பத்திரிகை செயலாளர் ஷஃபிகுல் ஆலம் தெரிவித்து உள்ளார்.

வக்ஃப் சட்ட திருத்தத்திற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

West Bengal வன்முறைக்குப் பின்னால் வங்கதேச ஊடுருவல்காரர்களா?
மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத்தின் மூன்று எல்லைப் பகுதிகளில் சமீபத்தில் நடந்த வன்முறை குறித்து உள்துறை அமைச்சகம் செவ்வாய் கிழமை கவலை தெரிவித்து இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் துணை ராணுவப் படைகளை அனுப்ப உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. வன்முறை குறித்த ஆரம்பக்கட்ட விசாரணையில் உள்ளூர் திரிணமூல் தலைவர்களால் ஆதரிக்கப்பட்ட வங்கதேச குற்றவாளிகள் வன்முறையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. வன்முறைக்கு பயந்து முர்ஷிதாபாத் மாவட்டத்தின் துலியன் நகரில் "400க்கும் மேற்பட்ட இந்துக்கள்" தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக மேற்குவங்க பாஜக பிரிவு குற்றம்சாட்டியுள்ளது. 

வங்கதேசத்தில் இந்துகளுக்கு பாதுகாப்பு வேண்டும் 

வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுவது குறித்து பலமுறை வங்கதேச அரசிடம் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, வங்கதேச சனாதன் ஜாகரன் மஞ்சாவின் செய்தித் தொடர்பாளர் மற்றும் சிட்டகாங்கில் உள்ள புண்டரிக் தாம் தலைவரான சின்மோய் கிருஷ்ணா தாஸ் பிரம்மச்சாரி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீன் மறுக்கப்பட்டது குறித்து இந்தியா "ஆழ்ந்த கவலையை" தெரிவித்து இருந்தது.