உலக அளவில் தனது கொடூரத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரப்படி 8 ஆயிரத்தை 500 ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக 8,356 பேர் கண்டறியப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 272 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் 716 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில் கடந்த 3 வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்துள்ளது. எனினும் இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என அரசு தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் ஊரடங்கு நடைமுறை முன்கூட்டியே அமல்படுத்தப்பட்டதால் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாமல் தடுக்கப்பட்டிருப்பதாகவும் அதன் காரணமாகவே பாதிப்பு எண்ணிக்கை மேலை நாடுகளை போல எகிறவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக தற்போது நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் செவ்வாய்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வந்த வண்ணம் உள்ளது. நேற்று அது குறித்து பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசித்தார். அக்கூட்டத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் முடிவெடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகக் கூடும். ஏற்கனவே ஒடிசா, பஞ்சாப் மற்றும் மஹாராஸ்டிரா மாநிலங்கள் இம்மாத இறுதி வரை ஊரடங்கு நீட்டித்து உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.