ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி, இந்திய ராணுவத்தின் வீரத்தையும் துணிச்சலையும் பாராட்டினார். ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் வீரர்களின் தியாகத்தைப் போற்றினார்.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய ராணுவ வீரர்களுக்கு சல்யூட் செய்வதாகக் கூறினார்.

"கடந்த சில நாட்களில் நாட்டின் திறனையும் பொறுமையையும் நாம் அனைவரும் கண்டோம். ஆயுதப்படைகள், ராணுவம், உளவுத்துறை மற்றும் விஞ்ஞானிகளுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்...." என்று பிரதமர் மோடி கூறினார்.

"இன்று, இந்த வீரம், துணிச்சல் ஆகியவற்றை நமது நாட்டின் ஒவ்வொரு தாய்க்கும், நாட்டின் ஒவ்வொரு சகோதரிக்கும், நாட்டின் ஒவ்வொரு மகளுக்கும் அர்ப்பணிக்கிறேன்" என்று கூறினார்.

ராணுவ வீரர்களின் துணிச்சல்:

"பயங்கரவாதிகளை அழிப்பதற்காக நமது ஆயுதப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்தோம்," என்று பிரதமர் மோடி கூறினார். "ஆபரேஷன் சிந்தூரின் நோக்கங்களை அடைவதில் நமது துணிச்சலான வீரர்கள் இணையற்ற வீரத்தைக் காட்டியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

நமது பெண்களின் நெற்றியில் இருந்து குங்குமத்தை அகற்றுவதன் விளைவுகளை எதிரிகள் இப்போது உணர்ந்துவிட்டதாகவும் கூறினார். ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் அல்ல என்பதை வலியுறுத்திய பிரதமர் மோடி மே 7 அன்று, இந்தியாவின் உறுதிப்பாடு செயல்பாடாக மாறியதை உலகம் முழுவதும் கண்டது என்றார்.

இன்று புத்த பூர்ணிமா. இந்தியா புத்தரின் வழியில் அமைதியை நாடுகிறது. இந்தியாவின் ஒவ்வொரு குடிமக்களும் அமைதியைத்தான் விரும்புகிறார்கள் எனவும் பிரதமர் எடுத்துரைத்தார்.

பாகிஸ்தானில் பயங்கரவாத தளங்களை குறிவைத்து இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியபோது, ​​கட்டிடங்கள் மட்டுமல்ல, எதிரிகளின் மனப்பான்மையும் அழிக்கப்பட்டது. 'தேசத்திற்கே முன்னுரிமை்' என்பதை வழிகாட்டும் கொள்கையாகக் கொண்டு, உறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என அவர் வலியுறுத்தினார்.

பயங்கரவாதிகள் கனவில் கூட நினைக்காத தாக்குதல்:

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத மறைவிடங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் மீது இந்தியாவின் ஆயுதப் படைகள் துல்லியமான தாக்குதல்களை நடத்தியதாக பிரதமர் மோடி கூறினார். இந்தியா இவ்வளவு துணிச்சலான முடிவை எடுக்கும் என்று பயங்கரவாதிகள் தங்கள் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு நாடு ஒற்றுமையாக நின்று 'தேசம் முதலில்' என்ற உணர்வால் வழிநடத்தப்படும்போது, ​​எஃகு போன்ற வலுவான முடிவுகள் எடுக்கப்பட்டு சக்திவாய்ந்த முடிவுகள் அடையப்படுகின்றன என்றும் அவர் மேலும் கூறினார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத மையங்களை இந்தியாவின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்கும்போது, ​​அவர்களின் கட்டிடங்கள் மட்டுமல்ல, அவர்களின் ஆயுதக் குவியலும் அழிக்கப்படும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

"...பாகிஸ்தானின் பயங்கரவாத மற்றும் இராணுவ தளங்கள் மீதான தாக்குதல்களை நாங்கள் இப்போது தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம்..." என்று பிரதமர் மோடி கூறினார். "இனி பாகிஸ்தானின் எந்த அணு ஆயுத அச்சுறுத்தலையும் பொறுத்துக்கொள்ள முடியாது..." என்று கூறிய பிரதமர் மோடி, “இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும்” என்றும் கூறினார்.

"பவல்பூர் மற்றும் முரிட்கே போன்ற பயங்கரவாத தளங்கள் உலகளாவிய பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக இருந்தன. 9/11 அல்லது இந்தியாவில் நடந்த பெரிய பயங்கரவாத தாக்குதல்கள் உட்பட உலகில் நடந்த அனைத்து பெரிய பயங்கரவாத தாக்குதல்களும் எப்படியோ இந்த பயங்கரவாத தளங்களுடன் தொடர்புடையவை..." என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.