இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று 6,536 பேருக்கு உறுதிபடுத்தப்பட்ட நிலையில், 146 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,45,380ஆக உயர்ந்துள்ளது. 

சீனாவில் உருவான கொரோன வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அப்படி இருந்த போதிலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் : இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,38, 845 ல் இருந்து 1,45, 380 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4,021ல் இருந்து 4,167ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 57,721 ல் இருந்து 60, 491 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்புடன் 80, 722 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 6,535 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 146 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தொடர்ந்து 5வது நாளாக கொரோனா பாதிப்பு 6000 கடந்து வருகிறது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு 50,667 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 15,786ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,695ஆக உள்ளது. 2வது இடத்தில் தமிழகமும், 3வது குஜராத்தும், 4வது இடத்தில் டெல்லியும் உள்ளது. உலக அளவில் ஈரானை முந்தி இந்தியா 10வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.