நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா, பாஜக கூட்டணி போராட்டம்: இரு அவைகளிலும் ஒத்தி வைப்பு நோட்டீஸ்!
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளனர்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன.
இதனிடையே, மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள், மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுதியது. அதில், ஒரு பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அதனை தட்டிக்கேட்ட அவரது சகோதரர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கலவர பூமியாக காட்சியளிக்கும் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி நடந்த சம்பவம் இப்போதுதான் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.
Manipur violence : மணிப்பூர் வன்முறையில் பள்ளிக்கு தீவைப்பு.. தொடரும் பதற்றம் - திணறும் அரசு
இந்த விவாகரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனவும், பிரதமர் மோடி இரு அவைகளிலும் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே இரு அவைகளிலுமே அவை நடவடிக்கைகள் நடைபெறவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை ஒத்தி வைக்கப்பட்ட இரு அவைகளும், இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர், இன்று காலை மீண்டும் கூடியது.
அப்போது, இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். மக்களவையில், காங்கிரஸ் எம்.பி.க்கள், மாணிக்கம் தாகூர், மணிஷ் திவாரி ஆகியோர் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளனர். பூஜ்ஜிய நேரம், கேள்வி நேரம் மற்றும் பிற நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு, மணிப்பூர் இனக்குழு மோதல் தொடர்பான விவாதிக்க வேண்டும் என அவர்கள் அதில் கோரியுள்ளனர்.
அதேபோல், திமுக எம்.பி., திருச்சி சிவா, ஆம் ஆத்மி எம்.பி., ராகவ் சத்தா, காங்கிரஸ் எம்.பி., ரஞ்சீத் ரஞ்சன் ஆகியோர் மாநிலங்களையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளனர்.
இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி பதாகைகளை ஏந்தி இந்தியா கூட்டணியினர் போராட்டம் நடத்திய நிலையில், ராஜஸ்தான், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் சட்ட-ஒழுங்கு பிரச்சினையை சுட்டிக்காட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.