பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு 7 ஆயிரத்து 500 கோடியை கடனுதவியாக இந்தியா வழங்குகிறது. 

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு 7 ஆயிரத்து 500 கோடியை கடனுதவியாக இந்தியா வழங்குகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏராளமான நாடுகளில் பொருளாதர நெருக்கடி ஏற்பட்டது. அந்த வகையில் இலங்கை மீண்டெழ முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அங்கு மக்கள் மீதான சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பால், அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களின் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் பசியால் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்க டாலர் கையிருப்பு இல்லாத இலங்கையில், பெட்ரோல், டீசல் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வுக்கு மத்தியில் நாளொன்றுக்கு 7 மணி நேரங்கள் மின்வெட்டும் நிலவுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உணவுப்பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

விலைவாசி உயர்வு, மின்சாரமின்மை தொழில்துறையையும், சுற்றுலா துறையையும் பாதிக்க செய்வதுடன், மக்களுக்கு இருக்கிற வேலைவாய்ப்புக்கும் சிக்கல் வந்துள்ளது. இதுமட்டுமின்றி உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து இலங்கை அரசு, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடம் உதவியை கோரி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஓராண்டாக இலங்கை கடும் பொருளாதார சிக்கலில் தவித்து வருவதை கருத்தில் கொண்டு இலங்கைக்கு 7 ஆயிரத்து 500 கோடியை கடனுதவியாக இந்தியா வழங்குகிறது. இந்தியாவின் உதவியை நாடி அந்நாட்டு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச டெல்லி வந்துள்ளார்.

பிரதமர் மோடியை சந்தித்து பேசிய இலங்கை நிதியமைச்சர், கூடுதலாக ரூ.7,500 கோடி கடனுதவியை பசில் ராஜபக்ச கேட்டதாக தெரிவித்தார். இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு ரூ.7,500 கோடியை கடனுதவி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த மாதம் இலங்கைக்கு அவசர கடனுதவியாக ரூ.3,750 கோடியை இந்தியா வழங்கியது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டை சமாளிக்க இலங்கைக்கு மீண்டும் கடனுதவி வழங்குவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியா அளிக்க உள்ள கடன் தொகையை கொண்டு உணவு, எரிபொருள், மருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளது.