முதலீட்டில் நம்பர் 1 சந்தை: சீனாவை முந்திய இந்தியா - இன்வெஸ்கோ ஆய்வு தகவல்!
முதலீட்டில் நம்பர் 1 சந்தையாக இந்தியா வளர்ந்து வருவதாக இன்வெஸ்கோ குளோபல் மேலாண்மை ஆய்வு 2023 தெரிவித்துள்ளது

இன்வெஸ்கோ குளோபல் இறையாண்மை சொத்து மேலாண்மை நடத்திய ஆய்வில், சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலீட்டிற்கான மிகவும் கவர்ச்சிகரமான வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா மாறியுள்ளது தெரியவந்துள்ளது.
இன்வெஸ்கோ குளோபல் இறையாண்மை சொத்து மேலாண்மை ஆய்வு 2023 அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையானது, தலைமை முதலீட்டு அதிகாரிகள் 142 பேர், மூலோபாய நிபுணர்கள், மூத்த வல்லுநர்களது கருத்துக்களின் அடிப்படையிலும், 85 அரசுக்கு சொந்தமான முதலீட்டு நிதி சொத்துகள் மற்றும் 57 மத்திய வங்கிகளின் தகவல்களின் அடிப்படையிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 86 சதவீதம் பேர் 21 டிரில்லியன் டாலர்கள் சொத்துக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர். முந்தைய பத்தாண்டுகளை ஒப்பிடும் போதும், பணவீக்கம் உயரும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், நடப்பு நிலவரத்தை ஒப்பிடும் போதும், பணவீக்கம் குறையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், பிசுபிசுக்கும் இதுபோன்ற பண வீக்க நிலவரம், பொருளாதார வளர்ச்சிக்கு மிகக் கடுமையான ஆபத்தாகக் கருதப்படுவதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வில் கலந்து கொண்ட முதலீட்டாளர்களில் 28 சதவீதம் பேர், உள்கட்டமைப்பில் 25 சதவீதம் அதிகரித்ததையடுத்து, அடுத்த 12 மாதங்களில் நிலையான வருமானத்திற்கான தங்கள் மூலோபாய ஒதுக்கீட்டை அதிகரிக்க எதிர்பார்க்கின்றனர். இருப்பினும், நிலையான வருமான ஒதுக்கீடுகள் நிர்வகிக்கப்படும் விதம் மறுபரிசீலனை செய்யப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த ஆய்வில் வளர்ந்து வரும் சந்தைகளில், சீனாவை பின்னுக்குத் தள்ளி இறையாண்மை முதலீட்டிற்கான மிகவும் கவர்ச்சிகரமான வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா மாறியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. மத்திய கிழக்கை தளமாகக் கொண்ட, அரசுக்கு சொந்தமான வளர்ந்து வரும் முதலீட்டு நிறுவனம், வணிகம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை என்று வரும் போது, இந்தியா இப்போது ஒரு சிறந்த நாடு என தெரிவித்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகை, ஒழுங்குமுறை முயற்சிகள், அரசு சொத்துகள் மீதான முதலீட்டாளர்களுடனான நட்புறவு உள்ளிட்ட காரணிகள் இதற்கு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவையை இலக்காகக் கொண்டு, அதிகரித்த வெளிநாட்டு கார்ப்பரேட் முதலீட்டால் பயனடையும் மெக்சிகோ மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இருப்பதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.
பிரேசில் உட்பட பல வளர்ந்து வரும் சந்தைகளில் நிலையான-வருமான கவர்ச்சி அதிகரித்து வந்ததை சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, அவை பணவீக்கத்தை முறியடித்து, இறுதியில் பணவியல் கொள்கையை தளர்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் பிரேசில் மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட முக்கியமான மூலப்பொருள் சந்தையை கொண்ட நாடுகள், பசுமை மாற்றம் மற்றும் மின்சார வாகனப் புரட்சிக்கு இடமளித்தன. இது, அதிக மூலப்பொருள் வருவாயை ஆதாரமாக கொண்ட அரசு முதலீட்டு நிறுவனங்களின் பல்வகைப்படுத்தலுக்கு முக்கிய ஆதாரமாக இருக்கலாம் எனவும் அந்த இன்வெஸ்கோ அறிக்கை மேலும் கூறுகிறது.
தங்கம் மற்றும் வளர்ந்து வரும் பத்திரங்கள்
இன்வெஸ்கோ அறிக்கையின்படி, அடுத்த பத்தாண்டுகளில் பணவீக்கம் அதிகமாக இருக்கும் என ஆய்வில் கலந்து கொண்ட 85 அரசு சொத்து நிதிகளில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவை மற்றும் 57 மத்திய வங்கிகள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தங்கம் மற்றும் வளர்ந்து வரும் சந்தைப் பத்திரங்கள் ஆகியவை நல்ல போட்டியளர்களாக பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீதான் போர் காரணமாக, ரஷ்யாவின் 640 பில்லியன் டாலர் தங்கம் மற்றும் அந்நிய செலாவணி இருப்புகளில் கிட்டத்தட்ட பாதியை மேற்கு நாடுகள் முடக்கியதன் காரணமாக இந்த மாற்றம் தூண்டப்பட்டிருக்கலாம் என்கிறது அறிக்கை.
அறிக்கையின்படி, புவிசார் அரசியல் கவலைகள் முதலீட்டாளர்களின் மனதில் உள்ளது, 72% முதலீட்டாளர்கள் வரவிருக்கும் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சிக்கான ஆபத்து என்றும், 79% பேர் அடுத்த 10 ஆண்டுகளில் புவிசார் அரசியல் அபாயத்தை ஒரு கவலையாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அன்னபாக்யா திட்டம்: பொதுமக்களுக்கு பணம் கிடைப்பதில் சிக்கல் - என்ன காரணம்?
முதலீட்டாளர்கள் வளர்ந்து வரும் சந்தைகளின் கடன், அதிக மகசூல் கடன் மற்றும் தனியார் கடன் ஆகியவற்றைப் பார்க்கிறார்கள் என இன்வெஸ்கோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ நிறுவனங்களின் தலைவர் ராட் ரிங்ரோ தெரிவித்துள்ளார்.
வளர்ந்து வரும் சந்தைகளில் அடுத்த மூன்று ஆண்டுகளில் தங்களுக்கு பொருந்தக்கூடிய அல்லது சிறந்த வளர்ச்சியடைந்த சந்தைகளின் செயல்திறனை 71% முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பார்கள் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வளர்ந்து வரும் ஆசிய-பசிபிக் சந்தைகளுக்கான ஒதுக்கீடுகளை இந்த ஆண்டு அதிகரிக்க 29% பேர் உத்தேசித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.