ஜி20: உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் - பிரதமர் மோடி!
ஜி20 மாநாட்டையொட்டி அடுத்த இரண்டு நாட்களுக்கு உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்ப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
ஜி20 தலைமையை இந்தியா ஏற்றுள்ளது. இந்தியா தலைமையின் கீழ் ஜி20 உச்சி மாநாட்டின் முதன்மை அமர்வு கூட்டம் தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்காக, ஜி20 தலைவர்கள், உலக நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் டெல்லி வந்துள்ளனர்.
இந்த நிலையில், ஜி20 மாநாட்டையொட்டி அடுத்த இரண்டு நாட்களுக்கு உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்ப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “செப்டம்பர் 9.10 ஆகிய தேதிகளில் டெல்லியின் பாரத் மண்டபத்தில் 18ஆவது ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. இந்தியா நடத்தும் முதல் ஜி20 உச்சி மாநாடு இதுவாகும். அடுத்த இரண்டு நாட்களில் உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்க்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
தில்லி ஜி20 உச்சி மாநாடு மனிதனை மையப்படுத்திய மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியில் ஒரு புதிய பாதையை உருவாக்கும் என்பது தனது உறுதியான நம்பிக்கை எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், “நமது கலாச்சார நெறிமுறையில் வேரூன்றிய, இந்தியாவின் ஜி20 தலைமையின் கருப்பொருள் ‘வசுதைவ குடும்பம் - ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்பது, உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற நமது உலகக் கண்ணோட்டத்துடன் ஆழமாக எதிரொலிக்கிறது. இந்தியாவின் ஜி20 தலைமை அனைவரையும் உள்ளடக்கியது, தீர்க்கமானது மற்றும் செயல் சார்ந்தது.” என்றும் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மனிதனை மையமாகக் கொண்ட முன்னேற்றத்திற்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, வரிசையில் கடைசியில் நிற்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் காந்திஜியின் பணியைப் பின்பற்றுவது முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜி20 உச்சிமாநாட்டின் போது, உலக சமூகத்தின் முக்கியப் பிரச்சினைகளை உள்ளடக்கிய 'ஒரு பூமி', 'ஒரு குடும்பம்' மற்றும் 'ஒரு எதிர்காலம்' ஆகிய அமர்வுகளுக்கு தாம் தலைமை ஏற்கவுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வலுவான, நிலையான, உள்ளடக்கிய மற்றும் சீரான வளர்ச்சியை மேம்படுத்துவது இதில் அடங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜி20 இரவு விருந்து: மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு இல்லை!
“நிலையான எதிர்காலத்திற்கான பசுமை மேம்பாட்டு ஒப்பந்தம் மற்றும் 21 ஆம் நூற்றாண்டிற்கான பலதரப்பு நிறுவனங்களை வலுப்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம். தொழில்நுட்ப மாற்றம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு போன்ற எதிர்காலத் துறைகளுக்கு நாங்கள் அதிக முன்னுரிமை அளிக்கிறோம். மேலும் பாலின சமத்துவம், பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் உலக அமைதியை உறுதிப்படுத்த நாம் கூட்டாக பணியாற்றுவோம்.” என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
நட்பு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்புகளை மேலும் ஆழப்படுத்த உலகத் தலைவர்கள் மற்றும் தூதுக்குழு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நட்டத்தவுள்ளதாகவும், விருந்தினர்கள் இந்திய விருந்தோம்பலின் அரவணைப்பை அனுபவிப்பார்கள் என்று தாம் நம்புவதாகவும் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“செப்டம்பர் 9 ஆம் தேதி இரவு குடியரசுத் தலைவர் விருந்து அளிக்கவுள்ளார். 10ஆம் தேதி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் உலகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தவுள்ளனர். அன்றைய தினம் நடைபெறவுள்ள நிறைவு விழாவில், ஆரோக்கியமான 'ஒரே பூமி'க்காக, 'ஒரு குடும்பம்' போன்று, நிலையான மற்றும் சமத்துவமான 'ஒரு எதிர்காலத்திற்கான' கூட்டுப் பார்வையை ஜி20 தலைவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.” என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.