இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது: பிரதமர் மோடி நம்பிக்கை
மத்தியப் பிரதேசத்தில் நடக்கும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேணிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியப் பொருளாதாரத்துக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று கூறியிருக்கிறார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஏழாவது உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடக்கிறது. அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் முன்னிலையில் இன்று, புதன்கிழமை, நடைபெறும் தொடக்க விழாவில் இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் இந்தியா உறுதியான நுண்பொருளாதார அடிப்படைகளைக் கொண்ட நாடு என்றும் ஜி20 நாடுகளிலேயே மிக வேகமாக வளர்ந்துவரும் நாடாக இந்தியா உள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
“மார்கன் ஸ்டேன்லி நிறுவனத்தின் கணிப்பில், இன்னும் 4 முதல் 5 வருடங்களில் இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக உருவாகும் எனக் கூறப்பட்டுள்ளது” எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ரூ.133 கோடி அபராதமா? கூகிள் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
முதலீடுகளைக் கவரும் நாடாக இந்தியா இருக்கிறது என்ற அவர், உலக அளவில் பல நாடுகள் சவால்களைச் சந்தித்துவரும் சூழலில், அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் பேசுகையில், இந்த மாநாட்டில் 70 தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த 5,000 பேர் கலந்துகொள்கிறார்கள் என்றும் 2026ஆம் ஆண்டுக்குள் மத்தியப் பிரதேச மாநிலத்தின் பொருளாதாரத்தை 550 மில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.