மணிப்பூரில் அமைதி திரும்ப மியான்மருடன் பேச்சுவார்த்தை நடத்தும் இந்தியா
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட இந்தியா மியான்மர் அரசுடன் எல்லை தாண்டி சட்டவிரோதமாக நடமாட்டத்தைத் தடுப்பது குறித்து விவாதித்துள்ளது.

இந்தியாவும் மியான்மரும் எல்லைப் பகுதிகளில் அமைதியைப் பேணுவது மற்றும் சட்டவிரோதமாக எல்லை தாண்டிய நடமாட்டம் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்தியுள்ளன. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மியான்மரில் இருந்த பாதுகாப்புச் செயலர் கிரிதர் அரமனே, மியான்மர் நாட்டின் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லேயிங்குடன் நே பை தாவில் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார்.
தனது இரண்டு நாள் பயணத்தின் போது, அவர் மியான்மர் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) மியா துன் ஓவையும் சந்தித்தார். மியான்மர் கடற்படைத் தளபதி அட்மிரல் மோ ஆங் மற்றும் பாதுகாப்புத் துறைகளின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் கான் மியின்ட் தான் ஆகியோருடன் சந்திப்புகளை நடத்தினார். இந்த பயணம் மியான்மரின் மூத்த தலைமையுடன் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை எழுப்ப ஒரு வாய்ப்பை வழங்கியதாக இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம் சொல்கிறது.
மணிப்பூருக்கு நான் கேரண்டி! அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தில்லான அறிவிப்பு
இந்த சந்திப்பின்போது, எல்லைப் பகுதிகளில் அமைதியைப் பேணுதல், எல்லைப் பகுதியில் சட்டவிரோத நடமாட்டம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இரு தரப்பும் தங்கள் பிராந்தியங்களை மற்றவர்களுக்கு விரோதமான எந்த நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறியுள்ளன.
மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி ஆகிய இரு சமூகங்களுக்கு இடையே இன மோதல் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. மணிப்பூர் மாநிலத்தின் 1700 கிமீ எல்லையில் 398 கிமீ மியான்மரின் இரண்டு பகுதிகளுடன் பகிர்ந்துகொள்ளப்படுகிறது - கிழக்கில் சாகாயிங் பிராந்தியத்திலும் தெற்கே சின் பிராந்தியத்திலும் இந்திய மியான்மர் எல்லைப் பகுதி உள்ளது.
அந்த நாட்டில் ஏற்படும் எந்த நிகழ்வும் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மியான்மரில் அமைதி நிலவுவதும் மக்களின் நல்வாழ்வும் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
மே 3 ம் தேதி மாநிலத்தில் மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே மோதல் வெடித்ததில் இருந்து 100 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 40,000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். மெய்தி சமூகத்தினர் பள்ளத்தாக்கு பகுதியில் வாழ்கின்றனர். குக்கிகள் பெரும்பாலும் மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர். இந்நிலையில், மெய்தி சமூக மக்கள் தங்களுக்கு பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்து கோருகின்றனர். இது தொடர்பான வழக்கில், மெய்தி சமூகத்தினரின் கோரிக்கையை மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதன் எதிரொலியாக இரு சமூகத்தினரும் நடத்திய பேரணியில் இருந்து வன்முறைச் சம்பவங்கள் தொடங்கின.
மனிதாபிமானம் செத்துருச்சு! தூங்கும் பயணிகளை தண்ணீரைக் கொட்டி எழுப்பும் ரயில்வே போலீஸ்!