ஜி20 உச்சி மாநாடு: உலக தலைவர்களுக்கு காத்திருக்கும் பானிபூரி!
ஜி20 உச்சி மாநாட்டுக்கு வரும் உலக தலைவர்கள் பானிபூரி, சாட் ஐட்டம்களை ருசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
ஜி20 உச்சிமாநாட்டின் முதன்மை அமர்வு கூட்டம் வருகிற செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் டெல்லி பிரகதி மைதானம் இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு வளாகத்தில் (ITPO) உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து ஏரளமான தலைவர்கள், பிரதிநிதிகள் டெல்லிக்கு வரவுள்ளனர். இதனால், தலைநகர் டெல்லி விழா கோலம் பூண்டுள்ளது.
அண்மையில், ஜி20 கூட்டத்தில் கலந்து கொள்ள பெங்களூரு வந்த ஜெர்மனியின் டிஜிட்டல் மற்றும் போக்குவரத்து அமைச்சர் வோல்கர் விஸ்ஸிங் இந்தியாவில் பணம் செலுத்த UPI முறையை பயன்படுத்தினார். யுபிஐ கட்டண அனுபவத்தால் வோல்கர் விஸ்ஸிங் மிகவும் ஈர்க்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் மாடலைப் பற்றியும் உயர்வாகப் பேசியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் பண பரிவர்த்தனை முறையை மாற்றியமைத்த UPI மாயாஜாலத்தை ஜி20 பிரதிநிதிகளுக்கு டெல்லி காட்டவுள்ளது. மேலும், ஜி20 பிரதிநிதிகளுக்கு பானிபூரி, சாட் போன்ற இந்திய தெரு உணவுகள் வழங்கப்படவுள்ளன. இதுகுறித்து பேசிய ஜி20 செயல்பாடுகளுக்கான சிறப்பு செயலாளர் முக்தேஷ் கே பர்தேஷி, கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டுக்கு உணவு வழங்குவதை முன்னணி ஹோட்டல் நிறுவனமாக ஐடிசி கையாள்கிறது என்றார்.
ஆனால், இந்தியாவின் தெரு உணவுகளை உலக பிரநிதிகளிடம் கொண்டு செல்வதே ஒட்டுமொத்தமான எண்ணம் என தெரிவித்த அவர், “தினை சார்ந்த உணவு வகைகளை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதேசமயம், பிரதிநிதிகள் இந்தியாவின் பல்வேறு பிராந்திய உணவு வகைகளையும் அனுபவிக்க வேண்டும். எங்கள் சமையல் கலைஞர்கள் பல்வேறு வகையான தானியங்கள், பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் பல்வேறு வகையான பால் பொருட்கள் ஆகியவற்றை மிகவும் புதுமையான உணவுகளுடன் பரிசோதித்து வருகின்றனர். தெரு உணவுகளில் டெல்லியே முன்னணியில் உள்ளது.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “மாநாட்டு மையத்தில் இந்திய அரசு சார்பில் ஐடிசி உணவு வழங்கும். பலவிதமான உணவுகள் பரிமாறப்படவுள்ளதை நீங்கள் பார்க்கலாம். மெனுவில் தினை ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும். பல்வேறு வகையான பிராந்திய உணவு வகைகளை உருவாக்க சமையல் கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பரிசோதனை செய்து வருகிறார்கள் மற்றும் சில மெனுக்கள் புதிதாக உருவாக்கப்பட்டு வருகின்றன.” என்றார்.
ஜி20 உச்சிமாநாட்டில் நாட்டின் செழுமையான கலாச்சாரம், பல்வேறு கைவினைப்பொருட்கள் மற்றும் பலவகையான உணவு வகைகளை காட்சிப்படுத்துவதைத் தவிர, டிஜிட்டல் துறையிலும் இந்தியா தனது முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். UPI பேமெண்ட்கள் எவ்வாறு செய்யப்படுகின்றன மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியா எவ்வாறு முன்னணியில் உள்ளது என்பதை பிரதிநிதிகளுக்கு காட்ட குழுக்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
டிஜிட்டல் பணம் செலுத்தும் துறையில் இந்தியா எவ்வாறு முன்னேறி வருகிறது என்பதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியாது என்றும், CoWin செயலி எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும், ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஆதாருடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் பிரதிநிதிகள் அறிந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்தியா கூட்டணி மும்பை கூட்டம் நிறைவு: அடுத்த கூட்டம் டெல்லியில்?
இந்தியாவில் ஜனநாயகத்தின் வேர்களைக் காட்டும் வகையில் ‘பாரத், ஜனநாயகத்தின் தாய்’ என்ற பெயரில் கண்காட்சி நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “ஜனநாயகம் வெளியில் இருந்து வரவில்லை. இது இந்திய மண்ணில் காலங்காலமாக உருவானது. எனவே ஜனநாயகத்தின் தாய் பாரதம் என்ற பெயரில் கண்காட்சி நடைபெற உள்ளது.” என்றார் அவர்.
ஜி20 பிரதிநிதிகள் ராஜ்காட், பூசா இன்ஸ்டிடியூட் ஆகியவற்றிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். மேலும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அவர்கள் தேசிய நவீன கலைக் கலைக்கூடத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு அவர்கள் கண்காட்சிகளை பார்த்து ரசிப்பார்கள். மேலும் சில வகையான ஷாப்பிங் அனுபவத்தையும் பெறுவார்கள். இது அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சிறப்பு செயலாளர் முக்தேஷ் கே பர்தேஷி தெரிவித்துள்ளார்.