இந்தியாவின் வடகிழக்கு ரயில் இணைப்பு திட்டத்தில் வங்கதேசம் வழியாகச் செல்லும் எல்லை தாண்டிய ரயில் திட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. வங்கதேசத்தில் மோசமடைந்து வரும் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
India changed north east Railway plan with Bangladesh: இந்தியாவின் வடகிழக்கு ரயில் இணைப்பு திட்டத்தில், வங்கதேசம் வழியாகச் செல்லும் பல எல்லை தாண்டிய ரயில் திட்டங்களை மத்திய அரசு திடீரென நிறுத்தி வைத்துள்ளது. இது பிராந்தியத்தின் உள்கட்டமைப்பு எதிர்காலம் மற்றும் பிராந்திய ராஜதந்திரம் குறித்த பல புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள் வங்கதேசத்துடன் இணைப்பு ரத்து:
மத்திய அரசு அண்டை நாடுகளின் ராஜதந்திரத்தில் வேறு நிலைப்பாடு எடுத்துள்ளது. குறிப்பாக வங்கதேச விஷயத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசதேசம் வழியாக இணைப்பதற்கு கொண்டு வரப்பட்டு இருந்த ரயில்வே திட்டங்களில் பல மாற்றங்களை செய்துள்ளது மத்திய அரசு. ஏற்கனவே கொண்டு வரப்பட்டு இருந்த மூன்று முக்கிய ரயில்வே திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில் உள்ள ஐந்து திட்டங்களை புதுடெல்லி ஒத்திவைத்துள்ளது. தற்போது புதுடெல்லி தனது பார்வையை வடக்கு நோக்கி நேபாளம் மற்றும் பூட்டான் நாடுகளுக்கு திருப்பி விட்டுள்ளது.
மத்திய அரசின் முடிவுக்கு முக்கிய காரணம் என்ன?
சிலிகுரி வழித்தடம் வழியாக உள்நாட்டு இணைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் தனது திட்டங்களை மறுசீரமைத்து வருகிறது. இந்த குறிப்பிடத்தக்க கொள்கை மறுசீரமைப்பு, கிட்டத்தட்ட ரூ. 5,000 கோடி மதிப்புள்ள முதலீட்டை மறுபரிசீலனை செய்யும் என்று தெரிய வந்துள்ளது. வங்கதேசத்தில் மோசமடைந்து வரும் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு குறித்த கவலைகளிலிருந்து இந்த மாற்று திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அரசு மூத்த அதிகாரிகள் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் பதற்றம்:
அகௌரா-அகர்தலா எல்லை தாண்டிய ரயில் பாதை, குல்னா-மோங்லா துறைமுக ரயில் பாதை மற்றும் டாக்கா-டோங்கி-ஜாய்தேப்பூர் ரயில் வழித்தட விரிவாக்கம் ஆகியவை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வழித்தடங்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசத்துடன் இணைக்கும் முக்கிய ரயில் வழித்தடமாக அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், வங்கதேசத்தில் நடத்து வரும் பதற்றத்தை அடுத்து இந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
பூடானுக்கு அடித்தது யோகம்:
அதற்கு பதிலாக, இந்திய அரசாங்கம் ரூ.3,500 முதல் ரூ. 4,000 கோடி வரையிலான புதிய முதலீட்டுத் திட்டத்தைப் பற்றி ஆலோசித்து வருகிறது. வங்கதேசத்தின் வழியாக ரயில் தடம் அமைப்பதை கைவிட்டு, அண்டை நாடான நேபாளம் மற்றும் பூடான் வழியாக போக்குவரத்து மாற்று வழிகளை ஆராயலாம் என்று தெரிய வந்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம், ஒரே வெளிநாட்டு கூட்டாளியை சார்ந்திருப்பது மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பாதைகள் மூலம் பிராந்திய இணைப்புக்கான புதிய ரயில் தடங்களை திறத்தல் என்று திட்டம் வகுக்கப்படுகிறது. குறிப்பாக ரயில்வே இணைப்பு இல்லாத அண்டை நாடான பூடானுக்கு இது மிகவும் உதவும்.
சிலிகுரி வழித்தடமும், சிக்கன்ஸ் நெக்:
இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் அண்டை நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு சிலிகுரி வழித்தடம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சிலிகுரி வழித்தடம் ஏழு முக்கிய வடமாநிலங்களை அண்டை நாடுகளான பூடான், நேபாளம், வங்கதேசத்துடன் பகிர்ந்து கொள்கிறது. எனவே இந்த வழித்தடத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக மத்திய அரசு பார்க்கிறது. இந்தப் பகுதியில் உள் உள்கட்டமைப்பு திறனை அதிகரிப்பதற்கான முயற்சிகளை அதிகாரிகள் துரிதப்படுத்தி வருகின்றனர். உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் முக்கியமான ரயில் பாதைகளை இரட்டிப்பாக்குவதற்கும், நான்கு மடங்காக அதிகரிப்பதற்கும் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. சிலிகுரி வழித்தடத்திற்கு ஊட்டமளிக்கும் மாநிலங்களாக இவை பார்க்கப்படுகின்றன. பெரும்பாலும் இந்தியாவின் 'சிக்கன்ஸ் நெக்' என்று அழைக்கப்படும் இந்த வழித்தடம் வடகிழக்கு மாநிலங்களுக்கான ஒரே உள்நாட்டு நிலம் சார்ந்த இணைப்பாக உள்ளது. மேலும், இயற்கை சீற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்கிறது. இந்த வழித்தடத்தை வலுப்படுத்துவது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
